தொடரும் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம்

தொடரும் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2017 | 7:35 pm

முல்லைத்தீவு கேப்பாபிலவில், பொது மக்களின் 111 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு தமது அமைச்சு 148 மில்லியன் ரூபாவை படையினருக்கு செலுத்துவதற்கான அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதுடன்,எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அமைச்சரவையில் அது குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகவும் மீள் குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தமது பூர்வீக காணிகளை விட்டு வெளியேறிய மக்கள் தற்காலிக முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் அகதி வாழ்க்கை வாழ்ந்த மக்கள் யுத்தம் முடிவடைந்த பின்னர் தமது சொந்து நிலங்களுக்கு திரும்பும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் தமது பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.

காணி விடுவிப்பை வலியுத்தி வடக்கு கிழக்கில் போராட்டங்களும் வலுப்பெற்றன.

தமது பூர்வீக காணியை விடுவிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி கேப்பாப்பிலவு மக்கள் இன்று 166 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் தமது காணிகளை விடுவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு மக்கள் அரசியல்வாதிகளிடம்  கேட்டிருந்தனர்.

இதேவேளை, கேப்பாபிலவில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதிக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

கேப்பாப்பிலவில் உள்ள 111 ஏக்கர் மற்றும் 70 ஏக்கர் இரண்டு ரூட் காணி என்பன பொது மக்களுக்கு சொந்தமானவை எனவும் அவர்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்லும் உரிமையை இனிமேலும் மறுக்க முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அந்தக் காணிகளை தாமதம் இன்றி விடுவித்து மக்களுக்கு கையளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கேப்பாபிலவின் 111 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக மீள் குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

111 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான அமைச்சரவைத் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் செவ்வாய் கிழமை அமைச்சரவையில் இது குறித்து ஆராயப்படவுள்ளதாகவும் மீள் குடியேற்ற அமைச்சு குறிப்பிட்டது.

இதேவேளை, காணி விடுவிப்பிற்காக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் கடந்த மாதம் 19ஆம் திகதி கேப்பாப்பிலவிற்கு சென்றிருந்தபோது, இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

[quote]நான்கு கட்டங்களாக காணிகள் விடுவிக்கப்படும். அடுத்த கட்டத்தில மக்களுக்கு காணிகளும் விடுவிக்கப்படும். 148 மில்லியன் காசு கேட்டாங்க. தாரேனு சம்மதம் சொன்னேன். விரைவில் அதையும் விடுவிப்போம்[/quote]

அதனடிப்படையில், படையினர் வசமுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான நிதியை செலுத்துவதற்கான அமைச்சரவை அனுமதியை பெற்றுக் கொள்ளவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்