வித்தியா படுகொலை: விஜயகலா உள்ளிட்ட 2 பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது

வித்தியா படுகொலை: விஜயகலா உள்ளிட்ட 2 பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது

வித்தியா படுகொலை: விஜயகலா உள்ளிட்ட 2 பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

08 Aug, 2017 | 9:28 pm

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஊடாக சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வித்தியா படுகொலையின் பிரதான சந்தேகநபரான சுவிஸ் குமார் தப்பிச்செல்ல உதவிபுரிந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவின் பிணை மனு தொடர்பில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்எம்.ரியால் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சந்தேகநபரான முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், குற்றப்புலனாய்வு பிரிவினர் உரிய முறையில் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும், தகுந்த ஆதாரங்கள் இன்றி தமது கட்சிக்காரர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையால் அவரை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த பிணை மனுவை நிராகரித்த அரச தரப்பு சட்டத்தரணி நிசாந்த் நாகரட்ணம், நியாயமான சந்தேகத்தின் அடிப்படையில் சட்ட மா அதிபரின் பரிந்துரைக்கு அமையவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் மேலும் ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் அரச தரப்பு சட்டத்தரணி கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் உயர் பதவியை வகித்திருந்தமையால், விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்கக்கூடும் என்பதால் அவருக்கு பிணை வழங்கக்கூடாது எனவும் அரச தரப்பு சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, கடந்த மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட காணொளி தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்வது தொடர்பில் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அரச தரப்பு சட்டத்தரணி நிசாந்த் நாகரட்ணம் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் ஊடாக வெகுவிரைவில் அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் எனவும் அரச தரப்பு சட்டத்தரணி மன்றுக்கு அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஏ.எம்.எம்.ரியால் உத்தரவிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்