பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவன பிரதம நிறைவேற்றதிகாரி முதன்முறையாக சாட்சியம்

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவன பிரதம நிறைவேற்றதிகாரி முதன்முறையாக சாட்சியம்

எழுத்தாளர் Bella Dalima

08 Aug, 2017 | 8:09 pm

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன, முறிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முதன்முறையாக சாட்சியமளித்தார்.

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் பெர்னாண்டோவிடம், அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி கசுன் பாலிசேன சாட்சியமளித்தார்.

கசுன் பாலிசேன, பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர், பெஸ்ட் கெப்பிட்டல் நிதி தரகர் நிறுவனம் – பார்ட்லி மெக்லஸ் அன்ட் ரோய் – அக்விட் செகிசூரிட் நிறுவனம் ஆகியவற்றில் சேவையாற்றினார்.

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தில் கசுன் பாலிசேன இணைந்துகொண்ட சந்தர்ப்பத்தில் அதன் தலைவராக ஜெஃப்ரி அலோசியஸ் செயற்பட்டதுடன், அர்ஜூன் அலோசியஸ் – சுரேன் முத்துராஜா – கொட்ஃபிரி அலோசியஸ் மற்றும் ரஞ்சன் ஹூலுகல்ல ஆகியோர் பணிப்பாளர் சபையாக செயற்பட்டனர்.

பேர்ப்பச்சுவல் குழுமம் சார்பில் பங்குச்சந்தையில், பேர்ப்பச்சுவல் அசெட் மெனேஜ்மென்ட் மற்றும் பேர்ப்பச்சுவல் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் செயற்பட்டதுடன், அர்ஜூன் அலோசியஸ் மற்றும் சுரேன் முத்துராஜா ஆகியோர் அதன் பணிப்பாளர்களாக செயற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2012 ஆம் ஆண்டு பங்குச்சந்தையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து நீதவான் பிரசன்ன ஜயவர்தன கேள்வி எழுப்பியதுடன், இவ்வாறான திட்டத்தை முன்னெடுப்பதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் வினவியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த கசுன் பாலிசேன, தான் நிறுவனத்தில் இணையும் முன்னரே அந்தத் திட்டம் மத்திய வங்கிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் மூலதனச் செலவு 310.3 மில்லியன் என்பது இதன்போது தெரியவந்தது.

அதனை பேர்ப்பச்சுவல் அசெட் மெனேஜ்மென்ட் நிறுவனம் ஊடாகப் பெற்றுக்கொண்டதாகவும் பாலிசேன குறிப்பிட்டுள்ளார்.

2014 செப்டம்பர் வரை பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் 816.6 மில்லியன் இலாபம் பெற்றுள்ளதுடன், அவர்களின் மூலதனம் 1.1 பில்லியனாக அதிகரித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்