நல்லாட்சிக்கான தேசிய முன்னணியிலிருந்து அயூப் அஸ்மின் நீக்கம்

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியிலிருந்து அயூப் அஸ்மின் நீக்கம்

எழுத்தாளர் Bella Dalima

08 Aug, 2017 | 7:47 pm

வட மாகாண சபையின் உறுப்பினராகவிருந்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அங்கத்தவரான அயூப் அஸ்மின், அக்கட்சியிலிருந்தும் கட்சியின் சகல நடவடிக்கைகளில் இருந்தும் முழுமையாக நீக்கப்பட்டுள்ளார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற வட மாகாண சபைத் தேர்தலின்போது முஸ்லிம்களுக்கான நலன்களை மையமாகக்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான புரிந்துணர்வின் அடிப்படையில், அயூப் அஸ்மின் வட மாகாண சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் 19 அம்ச ஒழுக்க நடைமுறை விதிகளுக்கு மாறாகவும் கட்சியின் தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமலும் அவர் நடந்துகொண்டதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி குறிப்பிட்டுள்ளது.

பதவி மூலமாகக் கிடைக்கும் நிதி மற்றும் கொடுப்பனவுகளை முறையாகக் கையாளுதல், கிடைக்கப்பெற்ற தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் மூலமான நன்மைகளை வடக்கு மக்களுக்காகப் பயன்படுத்தல் போன்ற விடயங்களுக்கு அவர் ஒத்துழைப்பு வழங்கவில்லை என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அறிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கட்சியின் தலைமைத்துவ சபையினால் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவரது அரசியல் கருத்துக்கள், நிலைப்பாடுகள் மற்றும் அரசியல் செயற்பாடுகள் அனைத்திற்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லையென அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், வட மாகாண சுகாதார அமைச்சர் பா. சத்தியலிங்கம், தனது அமைச்சுப் பொறுப்பை இராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்திருந்தார்.

வட மாகாண அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவிடம் சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கத்திற்கு எதிராக ஐந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

2014 தொடக்கம் 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுகாதார தொண்டர்களாகக் கடமையாற்றியவர்களுக்கு நிரந்தர நியமனம்  வழங்காமல் கடைகளிலும், மருந்தகங்களிலும் கடமையாற்றிவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கியமை, சுகாதார ஊழியர்களின் சீருடை விநியோகத்தில் முறைகேடுகள் போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இதனைத்தவிர, 94 மாகாண வைத்தியசாலைகளுக்கான உணவு விநியோகக் கேள்வி கோரலில் நடைபெற்ற முறைகேடு, வவுனியா வைத்தியசாலை இரத்த சுத்திகரிப்பு இயந்திர கொள்வனவிற்காக வழங்கிய நிதியை குறித்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தாமை,
சுகாதார திணைக்களங்களில் பாதுகாப்பு சேவை ஒப்பந்தம் கேள்வி கோரலில் தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டுக்களும் அமைச்சர் பா.சத்தியலிங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த பின்புலத்திலேயே வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, வட மாகாண அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு, ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என அறிவித்ததை அடுத்து, விவசாய
அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மற்றும் கல்வி, பண்பாட்டலுவல்கள் அமைச்சர் த.குருகுலராசா ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்