வேல் பவனி இன்று ஹம்பாந்தோட்டையை சென்றடைந்தது

வேல் பவனி இன்று ஹம்பாந்தோட்டையை சென்றடைந்தது

எழுத்தாளர் Bella Dalima

06 Aug, 2017 | 8:02 pm

பக்தர்களின் அரஹர கோஷத்துடன் வேல் பவனி இன்று ஹம்பாந்தோட்டையை சென்றடைந்தது.

ஆடிவேல் – சக்திவேல் விழா நடைபெற்ற கெப்பிட்டல் மகாராஜா நிறுவன தலைமையகத்திற்கு எழுந்தருளியிருந்த வேல் பெருமானுக்கு இன்று காலை சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

செல்வச்சந்நிதியான் சன்னதியிலிருந்து திருவீதி உலாவாக கந்தக்கடவுளின் ஞான வேலன் கொழும்பு மாநகருக்கு எழுந்தருளியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அடியவர் தம் துயர்போக்கி அருள் மழை பொழிவதற்காய் வேலாயுதப் பெருமான் இன்று காலை கெப்பிட்டல் மகாராஜா நிறுவன தலைமையக வளாகத்தில் இருந்து கதிர்காமத்திற்கான பவனியை ஆரம்பித்தார்.

தலைநகரின் பல்வேறு பகுதிகளின் ஊடாக பயணித்த ஞானவேலை, பெருந்திரளான மக்கள் தரிசித்து, காணிக்கை செலுத்தினர்.

இந்த வேல் பவனி மாத்தறை நகரிலுள்ள போதியை சென்றடைந்ததை அடுத்து, பெருந்திரளான பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் காணிக்கைகளையும் செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து ஆடிவேல் – சக்திவேல் நகர் பவனி தங்காலை ஊடாக ஹம்பாந்தோட்டையை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தது.

ஹம்பாந்தோட்டையை சென்றடைந்த வேல் பெருமானுக்கு முருகன் கோவிலில் விசேட பூஜைகள் இடம்பெற்றன.

இலங்கை திருநாட்டின் பாரம்பரிய விழாவான ஆடிவேல் விழாவை நாடு முழுவதும் வாழும் பக்தர்களை ஒன்றிணைத்துக் கொண்டாடும் முயற்சியாக ஆடிவேல் – சக்திவேல் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை MTV/MBC ஊடக வலையமைப்பு நியூஸ்பெஸ்ட்டுடன் இணைந்து நடத்துகின்றது.

நேற்று (05) நள்ளிரவு வரை சக்திவேல் ஆடிவேல் விழாவில் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

ஹம்பாந்தோட்டையில் இருந்து நாளை காலை வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் திருத்தலத்திற்கு சக்தி வேல் பெருமான் எழுந்தருளவுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்