ஊடகத்தை மீண்டும் விமர்சித்தார் பிரதமர்

ஊடகத்தை மீண்டும் விமர்சித்தார் பிரதமர்

எழுத்தாளர் Bella Dalima

06 Aug, 2017 | 9:06 pm

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஹட்டனில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு சிரச நிறுவனம் தொடர்பில் கருத்து தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது,

[quote]தகவல் பெற்றுக்கொள்வதற்கான சுதந்திரத்தினை இன்று உறுதிப்படுத்தியுள்ளோம். இவ்வாறான திறந்த சுதந்திரம் இதற்கு முன்னர் காணப்பட்டதா? தற்போது சிரச நிறுவனம் தொடர்ந்தும் என்னைத் திட்டுகின்றது. சிரச நிறுவனத்திற்கு சென்று நான் ஒருநாளும் தீ வைக்கவில்லை. என்னைத் திட்டுவதற்காக ஒரு நாளில் உள்ள 24 மணித்தியாலங்களை விட இன்னும் ஒரு மணி நேரம் மேலதிகமாகக் கேட்டு எனக்கு கடிதம் எழுதினார்கள். உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அனுமதி பெற்ற பிறகு இந்த விடயம் தொடர்பில் பதில் அளிப்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன். அத்தகைய சுதந்திரமே இந்த நாட்டில் தற்போது காணப்படுகின்றது.[/quote]

என பிரதமர் தெரிவித்தார்.

 

 

பிரதமர் ஊடகத்தை நோக்கி இவ்வாறு விரல் நீட்டினாலும் முறிகள் மோசடி மூலம் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள நட்டம் தொடர்பில் முழு நாடும் அறிந்துள்ளது.

அர்ஜூன் மஹேந்திரன் என்ற தனது நண்பர் மற்றும் அவரது மருமகனான அர்ஜூன் அலோசியஸ் ஆகியோரைத் தொடர்புபடுத்தி மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல் மூலம் ஒரு சில நிமிடங்களில் நாட்டு மக்களுக்கு 1.6 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டது.

கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் படி, பல வருடங்கள் தொழில்புரிந்து ஓய்வு பெறும் சந்தர்ப்பத்தில் அவர்கள் நன்மையைப் பெற்றுக்கொள்ளும் EPF நிதியத்திற்கு இந்த மோசடி மூலம் 12.5 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முறிகள் மோசடி மூலம் முப்பது வருடங்களுக்கு பல பில்லியன் ரூபா நட்டத்தை நாடு எதிர்கொண்டுள்ளது.

இந்த பாரிய மோசடி இவ்வாறு வௌியான போது, கட்சியின் சட்டத்தரணிகள் மூவர் அடங்கிய குழுவொன்றை நியமித்து பிரதமர் அறிக்கையைத் தயாரித்தார்.

தனது நண்பனை மத்திய வங்கியின் முக்கிய ஆசனத்தில் வைத்துக்கொண்டு பாராளுமன்றத்தில் கூட இந்த ஊழலை நியாயப்படுத்த பிரதமர் முயற்சி செய்தார்.

மேலும், பலர் இருக்கும் போது தனது தந்தையை மாத்திரம் ஏன் இலக்கு வைக்கிறார்கள் என்பது தெரியவில்லையென ரவி கருணாநாயக்கவின் மகள் சமூக வலைத்தளம் ஊடாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த ஊழல்மிகு கொடுக்கல் வாங்கலுக்கு காரணமான முதலாவது சந்திப்பு தொடர்பில் மேலும் சிலரை விசாரணைக்குட்படுத்த வேண்டும் என ஊழலுக்கு எதிரான அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் வலியுறுத்துகின்றன.

மக்களின் பணத்தை திருடியமை மாத்திரமன்றி மக்களின் இலத்திரனியல் தகவல்களை ICTA நிறுவனத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள நண்பர் ஊடாகப் பெற்றுக்கொள்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாட்டின் எதிர்கால முன்னேற்றத்தைக் கருத்திற்கொள்ளாமலே இவை அனைத்தும் இடம்பெறுகின்றன.

இவ்வாறு தொடர்ந்து மோசடி தொடர்பிலான தகவல்கள் வௌியான போது, 19ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் என்ற போர்வையில் ஊடகங்களுக்கு வரையறைகள் விதிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது, நியூஸ்பெஸ்ட் நீதிமன்றத்திற்கு சென்று விடயங்களை எடுத்துக்கூறியமையினால் அது தடுக்கப்பட்டது.

19 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தில் ஊடக தணிக்கைக்கு சந்தர்பம் வழங்கப்படாமையினால் தற்போது செய்தி மற்றும் ஊடகம் தொடர்பிலான சுயாதீன சபை தொடர்பிலான சட்டம் என்ற புதிய ஆவணத்தை தயாரித்து, அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் எதிர்பார்ப்பில் உள்ளார்.

மக்கள் மத்தியில் வறுமை அதிகரித்து அவர்கள் வாழ்க்கையில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளும் போது, நண்பர்கள் மற்றும் அடியாட்களைப் பயன்படுத்தி மக்களின் பணத்தைத் திருடும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

நாட்டிற்கு அரிசியைப் பெற்றுத்தரும் விவசாயிகள் இன்று நான்கு போகங்களிலும் விதைக்க முடியாமல் பெரும் துயரங்களை எதிர் கொண்டுள்ளனர்.

அவர்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்கு முறிகள் மோசடியினால் இழக்க நேரிட்ட பணத்தை ஏன் பயன்படுத்த முடியாது.

2017 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்காக 77 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளின் கட்டடங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக 500 மில்லியன் ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது.

முறிகள் மோசடி மூலம் இழக்கப்பட்ட அந்த பணத்தினால் பாடசாலைகளில் புதிததாக எத்தனை கட்டடங்களைக் கட்டியிருக்கலாம்?

நாட்டில் 70 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களுக்கு நீரை சுத்திகரிக்கும் எத்தனை இயந்திரங்களை இந்த நிதியினால் பொருத்தியிருக்கலாம்?

இவற்றுக்குப் பதிலாக முறிகள் மோசடிக்கு காரணமானவர்களுக்கு வரி நிவாரணம் வழங்கி, மதுபான உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கு இடமளிக்கப்பட்டது.

மக்களின் பசியைத் தீர்ப்பதற்கு களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை அரிசியும் இந்த மதுபான உற்பத்தி தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டது.

கொழும்பு – கண்டி அதிவேக வீதி , வொக்ஸ்வேகன் தொழிற்சாலை , ஹொரணை டயர் தொழிற்சாலை, தேசிய கொடுப்பனவுத்தளம் இவை அனைத்தினையும் மக்கள் மறந்துவிட மாட்டார்கள்.

இவை அனைத்தும் மக்கள் மத்தியில் வௌிப்படும் போது ஊடகத்துடன் விசனம் கொள்ளும் பிரதமர் தொடர்பில் மக்களின் நிலைப்பாடும் தௌிவானது.

அவர் 29 தடவைகள் தேர்தல்களில் தோல்வியடைந்தவர் என்பதனை மக்கள் தௌிவாக அறிந்துள்ளனர்.

ஊழல் மற்றும் மோசடிக்கு எதிரானவர்கள் தெரிவிக்கும் தகவல்களை மக்களுக்காக வௌியிடுவதற்கு நியூஸ்பெஸ்ட் ஒருபோதும் பின்நிற்பதில்லை.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்