இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட்: இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்களால் இந்தியா வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட்: இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்களால் இந்தியா வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட்: இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்களால் இந்தியா வெற்றி

எழுத்தாளர் Bella Dalima

06 Aug, 2017 | 5:46 pm

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை ஒரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையில், 2 – 0 என இந்தியா கைப்பற்றியது.

இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி பெற்றது.

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 622 ஓட்டங்களைக் குவித்து ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.

பதிலளித்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 183 ஓட்டங்களை மாத்திரமே பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

ஃபலோ-ஒன் இல் இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை 02 விக்கெட் இழப்பிற்கு 209 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தது.

திமுத் கருணாரத்ன 92 ஓட்டங்களுடனும் மலிந்த புஸ்பகுமார 02 ஓட்டங்களுடனும் இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

அணித்தலைவர் தினேஸ் சந்திமால் 02 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

என்றாலும், திமுத் கருணாரத்ன டெஸ்ட் அரங்கில் தனது 06 ஆவது சதத்தைப் பூர்த்தி செய்து அணியின் துடுப்பாட்டத்தைப் பலப்படுத்தினார்.

திமுத் கருணாரத்னவின் ஆட்டமிழப்பைத் தொடர்ந்து மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்கள் பிரகாசிக்கத் தவற, இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் 386 ஓட்டங்களுக்குள் முடிவுக்கு வந்தது.

இதனடிப்படையில், இந்தப்போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 0 என கைப்பற்றியது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக ரவீந்திர ஜடேஜா தெரிவானார்.

இரு அணிகளுக்குமிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 12 ஆம் திகதி கண்டி பல்லேகலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்