வித்தியா படுகொலை: சான்றுப்பொருட்கள் சந்தேகநபர்களின் மாதிரிகளுடன் ஒத்துப்போகவில்லை

வித்தியா படுகொலை: சான்றுப்பொருட்கள் சந்தேகநபர்களின் மாதிரிகளுடன் ஒத்துப்போகவில்லை

எழுத்தாளர் Bella Dalima

03 Aug, 2017 | 3:24 pm

யாழ். புங்குடு தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு படு கொலை செய்யப்பட்டமை தொடர்பான

தொடர் விசாரணையில் வழக்கு தொடுநர் சார்பில் நெறிப்படுத்தப்பட்ட அனைத்து சாட்சியப் பதிவுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

மூவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையிலான தொடர் விசாரணையின் 13 ஆம் நாள் விசாரணைகள் யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்று வருகின்றது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான மாணிக்கவாசகர் இளஞ்செழியன், அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோருடன் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் இந்த விசாரணை நடைபெறுகின்றது.

விசேட வழக்கு தொடுநரான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார ரட்ணம் மற்றும் யாழ். மேல் நீதிமன்ற அரசதரப்பு சட்டத்தரணி நிஷாந்த் நாகரட்ணம் ஆகியோர் இந்த வழக்கில் ஆஜராகியுள்ளனர்.

இன்றைய சாட்சிப்பதிவின் போது, 53 மற்றும் 11 ஆம் இலக்க சாட்சியாளர்கள் தமது சாட்சியங்களை பதிவு செய்திருந்தனர்.

வழக்கின் 53 ஆவது சாட்சியாளரான ஜின்டெக் நிறுவனத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி ருவன் ஜெயபெரும நீதிபதிகள் முன்னிலையில் தமது சாட்சியத்தை பதிவு செய்திருந்தார்.

மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் பெறப்பட்ட சான்றுப்பொருட்களில் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வு , சந்தேகநபர்களிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளுடன் ஒத்துப்போகவில்லை என கண்டறியப்பட்டதாக அவர் சாட்சியமளித்துள்ளார்.

இதேவேளை, மாணவியின் மூக்குக்கண்ணாடியை பெற்றுக்கொள்வதற்கு உதவி புரிந்த நபர் வழக்கின் 11 ஆவது சாட்சியாளராக இன்று சாட்சியமளித்துள்ளார்.

வழக்கு தொடுநர் சார்பில் அனைத்து சாட்சியங்களையும் நெறிப்படுத்துதல் இன்று நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து , பிரதிவாதிகள் தரப்பு சாட்சியங்களை வழங்குவதற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாத்தினரால் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

ஒன்பது பிரதிவாதிகளும் தனித்தனியாக வாக்குமூலம் வழங்க உரிமை உண்டு எனவும் அந்த வாக்குமூலங்கள் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படும் எனவும் நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்