ஆடிவேல் – சக்திவேல் விழா: வேல் பவனி இரண்டாவது நாளாக இன்றும் இடம்பெற்றது

ஆடிவேல் – சக்திவேல் விழா: வேல் பவனி இரண்டாவது நாளாக இன்றும் இடம்பெற்றது

எழுத்தாளர் Bella Dalima

03 Aug, 2017 | 7:12 pm

ஆடிவேல் – சக்திவேல் விழாவை முன்னிட்டு கந்தப் பெருமானின் வேல் பவனி இரண்டாவது நாளாக இன்றும் இடம்பெற்றது.

திருகோணமலை ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தில் ஆரம்பமாகிய இன்றைய வேல் பவனி குருநாகல் கதிரேசன் கோயிலை சென்றடைந்தது.

இலங்கை திருநாட்டின் பாரம்பரிய விழாவான ஆடிவேல் விழாவை, நாடு முழுவதும் வாழும் மக்களை ஒன்றிணைத்துக் கொண்டாடும் முயற்சியாக ஆடிவேல் – சக்திவேல் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

MTV/MBC ஊடக வலையமைப்பு நியூஸ்பெஸ்ட்டுடன் இணைந்து நடத்துகின்ற இந்த விழாவின் இரண்டாம் நாள் பவனி இன்று திருகோணமலை ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தில் இருந்து ஆரம்பமாகியது.

கிழக்கிலங்கையின் கலைக்கோயில் என வர்ணிக்கப்படும் திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குகின்றது.

வேல் பவனி திருகோணமலை நகர் ஊடாக கந்தளாய் நோக்கிப் பயணித்தது.

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சம்ஹாரத் திருத்தலம் திருச்செந்தூரில் பூஜிக்கப்பட்ட வேலாயுதத்தினை தரிசிக்கும் வாய்ப்பு இலங்கை வாழ் பக்தர்களுக்கு கிட்டியுள்ளது.

இதன்போது, மக்கள் காணிக்கைகளை செலுத்தும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், மக்களின் காணிக்கைகள் அனைத்தும் கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் ஒப்படைக்கப்படவுள்ளன.

5 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்ரமணியர் சுவாமி ஆலயத்தில் இருந்து திருவீதி உலாவாக வேல் பவனி கொழும்பு ப்ரேப்ரூக் பிளேஸிலுள்ள கெப்பிட்டல் மகாராஜா நிறுவன தலைமையக வளாகத்தை வந்தடையவுள்ளது.

அன்றைய நாள் முழுவதும் ஆடிவேல் விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டு கந்தபுராணம் போற்றும் கதிர்காமக் கந்தன் ஆலயம் வரை வேல் பவனி முன்னெடுக்கப்படவுள்ளது.

வேல் பவனி நாளைய தினம் குருநாகல் கதிரேசன் கோவிலில் ஆரம்பமாகி ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்ரமணியர் சுவாமி ஆலயத்தை சென்றடையவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்