டி.கே.பி. தசநாயக்க கடற்படை வைத்தியசாலைக்கு எவ்வாறு மாற்றப்பட்டார்: நீதவான் கேள்வி

டி.கே.பி. தசநாயக்க கடற்படை வைத்தியசாலைக்கு எவ்வாறு மாற்றப்பட்டார்: நீதவான் கேள்வி

By Bella Dalima

Aug 24, 2017 | 7:24 pm

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படைப் பேச்சாளர் கொமடோர் டி.கே.பி. தசநாயக்க கடற்படை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டமை தொடர்பில் நீதவான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வழக்கின் ஏழாவது சந்தேகநபரான முன்னாள் கடற்படைப் பேச்சாளர் கொமடோர் டி.கே.பி. தசநாயக்க நீதிமன்ற அனுமதியின்றி எவ்வாறு கடற்படை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் என்பது தொடர்பில் நீதவான் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

வழக்கின் எட்டாவது சந்தேகநபரான கடற்படை உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சியை கைது செய்வதற்கான பிடியாணையும் இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையின் முன்னேற்றம் தொடர்பில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் கடற்படைப் பேச்சாளர் டி.கே.பி தசநாயக்க உள்ளிட்ட ஆறு சந்தேகநபர்களையும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

2008 ஆம் ஆண்டு வௌ்ளை வேனில் கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

[youtube url=”https://www.youtube.com/watch?v=YVWD3ZQChgg” width=”560″ height=”315″]