வட மாகாண சபை: போனஸ் ஆசனத்திற்கு இரத்தினசிங்கம் ஜெயசேகரத்தின் பெயர் பரிந்துரை

வட மாகாண சபை: போனஸ் ஆசனத்திற்கு இரத்தினசிங்கம் ஜெயசேகரத்தின் பெயர் பரிந்துரை

எழுத்தாளர் Bella Dalima

29 Jul, 2017 | 7:03 pm

வட மாகாண சபையின் சுழற்சி முறையிலான போனஸ் ஆசனத்திற்கு இரத்தினசிங்கம் ஜெயசேகரத்தின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.

இரத்தினசிங்கம் ஜெயசேகரத்தின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

வட மாகாண சபையின் ஆளும் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்த இரண்டு போனஸ் ஆசனங்களில் ஒன்று நல்லாட்சிக்கான
தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி அயூப் அஸ்மினுக்கு வழங்கப்பட்டது.

மற்றைய போனஸ் ஆசனம் சுழற்சி முறையில் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் பகிரப்படுவதாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் நேற்றைய தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சுழற்சி முறையிலான போனஸ் ஆசனம் முதலாவதாக இலங்கை தமிழரசுக் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தி மேரி கமலா குணசீலனுக்கு வழங்கப்பட்டது.

இரண்டாவதாக ஈ.பி.ஆர்.எல்.எஃப். கட்சியை பிரதிநிதித்துப்படுத்தி எம்.பி.நடராஜாவிற்கும் அடுத்து ரெலோ கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி எஸ்.மயூரனுக்கும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும், சுழற்சி முறையிலான போனஸ் ஆசனத்தினை தமக்கு வழங்கவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்
நேற்றைய தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்திருந்தார்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப் கட்சியின் வேட்பாளரான ஜெயசேகரம் அவர்களை நியமித்து அக்கட்சிக்கு இரண்டாவது தடவையாகவும் சந்தர்ப்பம் வழங்கியுள்ளதாக தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் தேசிய கூட்மைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அனுப்பிய கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

எனினும், போனஸ் ஆசனத்திற்கு இலங்கை தமிழரசுக் கட்சியினால் பெயரிடப்பட்டுள்ள இரத்தினசிங்கம் ஜெயசேகரம், ஈ.பி.ஆர்.எல்.எஃப் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வடமாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

அதன் பின்னர் அவர் இலங்கை தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதாகும், ஈ.பி.ஆர்.எல்.எஃப்.கட்சிக்கும் அவருக்கும் எதுவித
சம்பந்தமும் தற்போது இல்லை எனவும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்