வவுனியா புதிய பஸ் நிலைய சர்ச்சை:  சுமூகமான தீர்வு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிப்பு

வவுனியா புதிய பஸ் நிலைய சர்ச்சை:  சுமூகமான தீர்வு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

21 Jul, 2017 | 7:48 pm

வவுனியா புதிய பஸ் நிலையத்தினை மீள செயற்படுத்துவது தொடர்பில் சுமூகமான தீர்வு எட்டப்பட்டுள்ளதாக வட மாகாண போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.

195 மில்லியன் ரூபா செலவில் வவுனியா புதிய பஸ் நிலையம் நிர்மாணிக்கப்பட்டு 7 மாதங்கள் கடந்துள்ள போதிலும், இன்னும் பயன்பாடற்ற நிலையிலேயே அது காணப்படுகின்றது.

நேர அட்டவணையை அடிப்படையாக வைத்து இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் மற்றும் தனியார் பஸ் ஊழியர்களுக்கு இடையில் தோன்றிய முரண்பாடே இந்த நிலைக்குக் காரணமாக அமைந்துள்ளது.

இந்த முரண்பாட்டைத் தீர்ப்பதற்காக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதிலும், இணக்கப்பாடு எட்டப்படவில்லை.

இந்நிலையில், கடந்த 18 ஆம் திகதி வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், இலங்கை போக்குவரத்து சபை, தனியார் பஸ் ஊழியர்கள் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் புதிய பஸ் நிலையத்தில் மாவட்ட மற்றும் மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகளை முன்னெடுக்கவும் ,பழைய பஸ் நிலையத்தில் உள்ளூர் பஸ் சேவைகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இணைந்த நேர அட்டவணையின் பிரகாரம், இதனை பரீட்சார்த்தமாக ஒரு மாதத்திற்கு முன்னெடுக்கவுள்ளதாக கூட்டத்தின் போது முடிவு எட்டப்பட்டது.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர், வடமாகாண ஆளுநர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளுக்கும் வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளது.

வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பஸ் தரிப்பிடத்தினை இயங்கச்செய்வதற்கு வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுவரும் நிலையில், அவரை பதவியில் இருந்து நீக்குவதானது தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தினை பாதிக்கும் என வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வட மாகாணத்தில் இணைந்த நேர அட்டவணையை அமுல்படுத்துவது தொடர்பில் வட மாகாண போக்குவரத்து அமைச்சின் செயலாளர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் நேரக்கணிப்பாளர்கள் மற்றும் தனியார் பஸ் நேரக்கணிப்பாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

எனினும், இந்த கலந்துரையாடலில் இலங்கை போக்குவரத்து சபையின் நேரக்கணிப்பாளர்கள் கலந்து கொள்ளவில்லை.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்