கொக்குத்தொடுவாயில் விவசாயக் காணிகள் அளவீடு செய்யப்பட்டமைக்கு பிரதேசவாசிகள் எதிர்ப்பு

கொக்குத்தொடுவாயில் விவசாயக் காணிகள் அளவீடு செய்யப்பட்டமைக்கு பிரதேசவாசிகள் எதிர்ப்பு

கொக்குத்தொடுவாயில் விவசாயக் காணிகள் அளவீடு செய்யப்பட்டமைக்கு பிரதேசவாசிகள் எதிர்ப்பு

எழுத்தாளர் Bella Dalima

19 Jul, 2017 | 9:39 pm

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாயில் தமது பூர்வீக விவசாயக் காணிகள் அளவீடு செய்யப்பட்டமைக்கு பிரதேசவாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

விவசாயக் காணிகளை, மகாவலி அபிவிருத்தித் திட்டத்திற்குள் கொண்டுவருவதற்கான அளவீட்டுப் பணிகள் நேற்றும் (18) நேற்று முன்தினமும் (17) முன்னெடுக்கப்பட்டதாக மக்கள் குறிப்பிட்டனர்.

கொக்குத்தொடுவாய் கோட்டக்கேணி பிள்ளையார் கோவில் பகுதியிலிருந்து, மணல் இறக்கம் என்ற பகுதி வரை அளவீடு செய்யப்பட்டு, எல்லையிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், காணி உரிமையாளர்களினால் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனிடம் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, பொதுமக்களும் மாகாண சபை உறுப்பினரும் அந்த இடத்திற்கு இன்று சென்றனர்.

கொக்குத்தொடுவாய் மக்களின் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரனிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

விவசாயக் காணிகளின் உரிமப் பத்திரங்கள் காணப்பட்டாலும், மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் சட்டதிட்டங்கள் தொடர்பிலும் கவனத்திற்கொள்ளப்படும் என அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் சட்டதிட்டங்களுக்கமைய, ஒரு நபருக்கு அதிக பரப்பளவைக் கொண்ட காணிகளை வழங்க முடியாது என்பதுடன், ஒருவருக்கு இரண்டு ஏக்கர் மாத்திரமே வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், வேறு தரப்பினருக்கு வழங்குவதற்காக அளவீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நிராகரித்தார்.

உரிமையாளர்களுக்கு வழங்குவதற்காகவே கொக்குத்தொடுவாய் பகுதியில் அளவீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் நியூஸ்பெஸ்ட்டிற்குத் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்