வட மத்திய மாகாண சபையில் கைகலப்பு

வட மத்திய மாகாண சபையில் கைகலப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Jul, 2017 | 12:46 pm

வட மத்திய மாகாண சபைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடிப்படையாகக் கொண்ட இன்றைய மாகாண சபை அமர்வில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

மாகாண சபையின் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினரால் கொண்டுவரப்பட்ட தன்மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு எதிராக சபைத் தலைவர் பி.எம்.ஆர். சிறிபால அனுமதி வழங்காதமையிட்டு சபையில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

வட மத்திய மாகாண சபையில் அங்கம் வகிக்கும் கூட்டு எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர்களுக்கும், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

இதன்போது இரண்டு தரப்பு உறுப்பினர்களும் மாகாண சபையின் செங்கோலை பறித்துச்செல்ல முற்பட்டபோது, செங்கோலுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சபைத் தலைவர் சபை நடவடிக்கைகளை எதிர்வரும் ஒகஸ்ட் 8 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக அறிவித்துவிட்டு சபையிலிருந்து வெளியேற முற்பட்டார்.

இந்த நிலையில், அவரை மீண்டும் வலுக்கட்டாயமாக சபைத் தலைவர் ஆசனத்தில் அமர்த்துவதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேற்கொண்ட பிரயத்தனம் வெற்றியளிக்கவில்லை.

இதன் பின்னர் எதிர்க்கட்சித் தரப்பினரால் பிரேரிக்கப்பட்ட, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் டி.எம். அமரதுங்க சபைத் தலைவர் ஆசனத்தில் அமர்ந்ததுடன், எட்டு குற்றச்சாட்டுகள் அடங்கிய பி.எம்.ஆர். சிறிபால மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டார்.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, சபையில் எவ்வித ஆட்சேபனைகளும் இல்லாத நிலையில், ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

சபைத் தலைவராக நியமிக்கப்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர் டி.எம். அமரதுங்க சபை அமர்வை ஒத்திவைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்