அரசியல்வாதிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள்: தண்டனை பெற்றுக்கொடுப்பதில் தாமதம் ஏன்?

அரசியல்வாதிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள்: தண்டனை பெற்றுக்கொடுப்பதில் தாமதம் ஏன்?

எழுத்தாளர் Bella Dalima

12 Jul, 2017 | 10:14 pm

கடந்த அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கத்தில் இடம்பெறும் ஊழல் மோசடிகள், முறைகேடுகள் தொடர்பில் அரசியல் கட்சியினர் ஒருவர் மற்றவரை குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தண்டனை பெற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளில் நிலவும் தாமதத்திற்கான காரணம் குறித்து அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் ஊடகவியலாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு, FCID எனப்படும் பொலிஸ் நிதிக்குற்றவியல் விசாரணைப் பிரிவில் மாத்திரம் விசாரணைகளுக்காக 82 கோப்புகள் இருப்பதாக ராஜித சேனாரத்ன பதிலளித்தார்.

விசாரணைகளில் அரசியல் தலையீடு உள்ளதாகவும் தற்போதைய அமைச்சர்கள் சிலருக்கு எதிரான விசாரணைகள் இடம்பெறுவதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் விஜித்த ஹேரத் குறிப்பிட்டார்.

புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு முன்னர் அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய முக்கிய வாக்குறுதியான ஊழலுக்கு எதிரான செயற்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நிலைப்பாடாகவுள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றது. அவற்றில் லசந்த விக்ரமதுங்க கொலை, எக்னலிகொட காணாமற்போன சம்பவம், வசிம் தாஜூடின் கொலை, அவன்ற் கார்ட் கொடுக்கல் வாங்கல், சுனாமி நிதி மோசடி, சிரலிய கணக்கு, எயார் லங்கா மிக் கொடுக்கல் வாங்கல், ஊடக நிறுவனங்களைத் தாக்கியமை மற்றும் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டமை, சீருடை விநியோக மோசடி, டி ஏ ராஜபக்ஸ அருங்காட்சியகக் கொடுக்கல் வாங்கல், CSN தொலைக்காட்சி கொடுக்கல் வாங்கல், மல்வானை சொகுசு மாளிகை மற்றும் நிலக்கரி விலை மனு கொடுக்கல் வாங்கல் என்பன முக்கியமானவை.

இதேவேளை, நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராகவும் இன்று பல முக்கியமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல், மத்திய அதிவேக வீதி ஒப்பந்தம், ஃவொக்ஸ்வேகன் தொழிற்சாலை தொடர்பிலான பொய்யான செயற்பாடுகள், பாக்கு மீளேற்றுமதி கொடுக்கல் வாங்கல், ஹொரணை தொழிற்சாலையின் காணி தொடர்பிலான கொடுக்கல் வாங்கல், கூகுள் லூன் திட்டம், லங்கா ட்ரான்ஸ்ஃபோமர்ஸ் கொடுக்கல் வாங்கல், கொழும்பு டீ.ஆர். விஜயவர்தன மாவத்தையிலுள்ள காணி தொடர்பிலான கொடுக்கல் வாங்கல், வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான காப்புறுதி மோசடி, கல்குடா மதுபான உற்பத்தி தொழிற்சாலை தொடர்பிலான முக்கிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த அனைத்து கொடுக்கல் வாங்கல்களுக்குப் பின்னாலும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரின் பெயர்கள் குறிப்பிடப்படுவதுடன், அரச அதிகாரிகள் பலரும் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளுக்கு ஏற்ப, இந்த அனைத்து கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான தகவல்களையும் வெளிப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவது நல்லாட்சி அரசாங்கத்தின் பொறுப்பல்லவா?

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்