மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகம்: சந்தேகநபரின் மரபணு மாதிரிகள் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு

மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகம்: சந்தேகநபரின் மரபணு மாதிரிகள் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு

எழுத்தாளர் Staff Writer

10 Jul, 2017 | 9:15 pm

திருகோணமலை மூதுார் பெருவெளி கிராமத்தில் மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரின் மரபணு மாதிரிகளை அரச இரசாயனப் பகுப்பாய்வாளருக்கு அனுப்பிவைக்குமாறு மூதூர் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்குள் இது தொடர்பிலான அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறும் நீதவான் உத்தரவிட்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நீதிமன்றத்தில் விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

திருகோணமலை மூதுார் பெருவெளி கிராமத்தில் மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் முறையாக இடம்பெறுவதில்லை என கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மன்றில் ஆஜராகியிருந்தது.

இதன்போது பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் காணொளி சாட்சியங்களை பதிவு செய்வதற்கும் அதிகார சபைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை இன்றைய வழக்கு விசாரணைகளின் போது குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் ஆஜராகியிருக்கவில்லை.

அடுத்த தவணைகளில் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சிறுமிகளை மன்றில் ஆஜர்படுத்த வேண்டியதில்லை எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு விசாரணை செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மூதூர் பெருவெளி பகுதியில் கட்டட நிர்மாணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தவர்களால் கடந்த மே மாதம் 28 ஆம் திகதி ஆறு வயதான இரண்டு சிறுமிகளும் எட்டுவயது சிறுமியும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் ஐந்து பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதியை பெற்றுக் கொடுக்குமாறு வலியுறுத்தி மக்கள் தொடர்ச்சியாக பல போராட்டங்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்