ஊடக சட்டம் தொடர்பில் அரச தகவல் பணிப்பாளர் நாயகத்தின் கூற்று உண்மைக்குப் புறம்பானது: சுதந்திர ஊடக இயக்கம்

ஊடக சட்டம் தொடர்பில் அரச தகவல் பணிப்பாளர் நாயகத்தின் கூற்று உண்மைக்குப் புறம்பானது: சுதந்திர ஊடக இயக்கம்

எழுத்தாளர் Bella Dalima

08 Jul, 2017 | 10:14 pm

ஊடகவியலாளர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கக்கூடிய புதிய சட்டங்களைக் கொண்டுவருவதற்கான வசதிகளை ஏற்படுத்தும் ஆவணம் தொடர்பில் மேலும் பல விடயங்கள் வெளியாகியுள்ளன.

செய்தி ஊடக தர நிர்ணய சுயாதீன பேரவை சட்டம் என இந்த ஆவணம் பெயரிடப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் சட்டங்களை வகுப்பதற்கு இதில் யோசனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன், அந்தப் பேரவையின் தலைவர் பதவிக்கு ஒய்வுபெற்ற நீதிபதி அல்லது சட்டத்தரணி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடக நிறுவனங்களிடமிருந்து செய்தி மூலங்களைப் பெற்றுக்கொள்வதற்கான அதிகாரம் இந்த பேரவைக்கு வழங்கப்படவுள்ளமை பாரதூரமான விடயமாகும்.

இது தொடர்பில் ஊடக அமைப்புக்களுடன் கலந்துரையாடியதாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரங்க கலன்சூரிய வெளியிடும் கருத்தும் உண்மைக்குப் புறம்பானது என்பது நிரூபணமானது.

சட்டமூலம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது கலந்துரையாடலுக்குப் பின்னர் தமது அமைப்பு அல்லது அதன் பிரதிநிதி சீதா ரஞ்சினி எந்த ஒரு விடயத்தையும் அறிந்திருக்கவில்லை என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

மக்களின் கருத்துக்களைக் கேட்டறிவதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது என்ற விடயத்தை பத்திரிகை வாயிலாக அறிந்ததாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஊடக தர நிர்ணயம் தொடர்பில் அல்லது அதற்கான குழுவை அமைப்பது குறித்து தாம் எந்த ஒரு பேச்சுவார்த்தையிலும் கலந்துகொள்ளவில்லை என இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் நேற்று (07) தெரிவித்தது.

இதேவேளை, அரசாங்க செய்தி பணிப்பாளர் நாயகத்தின் ஒரு சில கருத்துக்களுக்கு மக்கள் அதிருப்தி வெளியிட்டனர்.

 

காணொளியில் காண்க…

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்