யுத்தத்தை தாமே வெற்றி கொண்டதாக கோட்டாபய தெரிவிப்பதை ஏற்றுக்கொள்வதற்கில்லை: சரத் பொன்சேகா

யுத்தத்தை தாமே வெற்றி கொண்டதாக கோட்டாபய தெரிவிப்பதை ஏற்றுக்கொள்வதற்கில்லை: சரத் பொன்சேகா

எழுத்தாளர் Bella Dalima

08 Jul, 2017 | 8:19 pm

தன்னைக் கைது செய்யும் திட்டம் உள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ நேற்று (07) தெரிவித்த கருத்திற்கு அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று பதிலளித்தார்.

தன்னை ஒரு மாதத்திற்குள் கைது செய்வதாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்ததை தான் பார்த்ததாகவும், மஹிந்த அமரவீர வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவாராக இருந்தால், அதில் சுயாதீன நிலை காணப்படாது எனவும் கோட்டாபய ராஜபக்ஸ நேற்று தெரிவித்திருந்தார்.

இதற்கு மஹிந்த அமரவீர பின்வருமாறு பதிலளித்தார்,

[quote]இவ்வாறு அவர் தெரிவித்தமை தொடர்பில் நான் மிகவும் கவலைப்படுகின்றேன். ராஜபக்ஸ குடும்ப உறுப்பினர் ஒருவருக்குக் கிடைத்த தகவலுக்கு அமையவே அவர் இவ்வாறு கூறியதாகத் தெரிவித்தார். அவருக்கு தண்டனை வழங்கி மகிழ்வடையும் கீழ் நிலையில் இருப்பவனல்ல என்பதை நான் கூறிக்கொள்கின்றேன். இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒரிடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் இது தொடர்பில் திட்டம் தீட்டப்பட்டது. அந்த இடத்தில் பேஸ்ஃபுக் பிரதானி மற்றும் அரசியல்வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அடுத்த வாரமளவில் எனக்கு இதனை அம்பலப்படுத்த முடியும்.[/quote]

என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, யுத்தத்தினை தாமே வெற்றி கொண்டதாக கோட்டாபய ராஜபக்ஸ ஊடகங்களுக்குத் தெரிவிக்கும் கருத்தை யாரும் ஏற்றுக்கொள்வதற்கில்லை என பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

கோட்டாபய ராஜபக்ஸ 15 வருடங்கள் வெளிநாட்டிலிருந்ததால் அவருக்கு நாட்டில் அரசியலமைப்பொன்று இருந்ததா என்பது தெரியாது என்றும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இருந்த ஜனாதிபதிகள், இராணுவத்தளபதிகள் முடிந்தளவு நாட்டிற்கு சேவையாற்றியதாகவும் யுத்தத்திற்காக கோட்டாபய ராஜபக்‌ஸ என்ன செய்தார் என்பது அவரது மனசாட்சிக்குத் தெரியும் என்றும் அவர் தவறிழைத்திருந்தால் நாட்டில் ஏனையவர்கள் எதிர்கொள்ளும் சட்டத்தினையே அவரும் எதிர்கொள்ள வேண்டும் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

இன்று சரத் பொன்சேகா ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைக் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்