பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனக் கொள்வனவு: குறைநிரப்புப் பிரேரணை நிறைவேற்றம்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனக் கொள்வனவு: குறைநிரப்புப் பிரேரணை நிறைவேற்றம்

எழுத்தாளர் Bella Dalima

07 Jul, 2017 | 9:30 pm

பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கான வாகனக்கொள்வனவு, கொள்வனவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு குத்தகை வழங்குவது, உத்தியோகப்பூர்வ இல்லங்களை புனர்நிர்மாணம் செய்தல் ஆகியவற்றிற்கான குறைநிரப்புப் பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த குறைநிரப்புப் பிரேரணையின் மொத்த தொகை 19 கோடியே 71 இலட்சத்து 9,300 ரூபாவாகும்.

இந்த குறைநிரப்பு பிரேரணையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் வாகனக் கொள்வனவிற்காக மாத்திரம் 12 கோடியே 10 இலட்சத்து 98 ஆயிரத்து 600 ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் 8 கோடியே 60 இலட்சம் ரூபா மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பிரதி அமைச்சர், தபால் சேவை மற்றும் இஸ்லாம் மத விவகார அமைச்சருக்கான இரண்டு வாகனங்களைக் கொள்வனவு செய்ய ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சரின் பாதுகாப்பு வாகனத்திற்காக 90 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த குறை நிரப்புப் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாண ஆளுநருக்கு கொள்வனவு செய்யப்பட்ட வாகனத்திற்கு செலுத்துவதற்காக எஞ்சியுள்ள தொகையான 8 இலட்சத்து 48 ஆயிரத்து 400 ரூபாவும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அமைச்சர்களின் உத்தியோகப்பூர்வ இல்லங்கள் மூன்றினை புனர்நிர்மாணம் செய்வதற்கான நிதியும் இந்த குறைநிரப்புப் பிரேரணையூடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தை புனர்நிர்மாணம் செய்வதற்காக மேலதிக ஒதுக்கீட்டுத் தொகையாக ஒரு கோடியே 48 இலட்சத்து 96 ஆயிரம் ரூபாவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தை புனர்நிர்மாணம் செய்வதற்காக ஒரு கோடியே 30 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிரதேச அபிவிருத்தி அமைச்சரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தை புனர்நிர்மாணம் செய்வதற்காக 2 கோடியே 18 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா நிதி இந்த குறைநிரப்புப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதனைத்தவிர, நான்கு பிரிவுகளுக்கான குத்தகை செலவுக்கு இரண்டு கோடியே 8 இலட்சத்து 95 ஆயிரத்து 700 ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்