ஊடகவியலாளர்களுக்கான சட்டமூலம்: அமைச்சர்கள் கருத்து, டொபி மென்டல் தெளிவூட்டல்

ஊடகவியலாளர்களுக்கான சட்டமூலம்: அமைச்சர்கள் கருத்து, டொபி மென்டல் தெளிவூட்டல்

எழுத்தாளர் Bella Dalima

07 Jul, 2017 | 8:54 pm

ஊடகவியலாளர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கக்கூடிய புதிய சட்டங்களைக் கொண்டு வருவதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தும் ஆவணமொன்று தயாரிக்கப்பட்டு வருவது குறித்து தமக்கு தெரியாது என அமைச்சர்கள் சிலர் இன்று கூறினர்.

செய்தி ஊடக தர நிர்ணய சுயாதீன பேரவை சட்டம் என இந்த ஆவணம் பெயரிடப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் சட்டங்களை வகுப்பதற்கு யோசனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன், அந்தப் பேரவையின் தலைவர் பதவிக்கு ஒய்வுபெற்ற நீதிபதி அல்லது சட்டத்தரணி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊடகவியலாளர்களின் ஒழுக்கம் தொடர்பில் அல்லது அதனுடன் தொடர்புடைய குழு ஒன்றை நியமித்தல் குறித்து தான் எந்தவொரு கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை என இலங்கை தொழிற்சங்க ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் லசந்த ருஹூணுகே தெரிவித்துள்ளார்.

லசந்த ருஹூணுகே இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு எழுந்து சென்றதாகக் கடந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலன்சூரிய குறிப்பிட்டிருந்தார்.

2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதிலும், தமது சங்கத்தின் பெயரில் வருகை தந்திருந்த போலி சங்கம் ஒன்று இந்த கலந்துரையாடலுக்காக அழைக்கப்பட்டிருந்ததன் காரணமாக இடைநடுவே எழும்பிச் சென்றதாகவும் அதன் பின்னர் எவ்வாறான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன என்பது தொடர்பில் தான் அறிந்திருக்கவில்லை என்றும் லசந்த ருஹூணுகே தெரிவித்துள்ளார்.

இந்த பின்னணியில், எதிர்காலத்தில் அவர்களால் ஏற்பாடு செய்யப்படும் கலந்துரையாடல்களில் கலந்து கொள்வதா, இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளதாக இலங்கை தொழிற்சங்க ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இந்த ஆவணம் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் டொபி மென்டல் என்றழைக்கப்படும் வெளிநாட்டு அரசசார்பற்ற அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர் தனது தலையீடு தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த நடவடிக்கைகள் குழு ஒன்றினால் முன்னெடுக்கப்படுவதாகவும் அந்தக் குழுவை அரசாங்கத்தின் சார்பில் ரங்க கலன்சூரியவே ஸ்தாபித்ததாகவும் பின்னர் ஐவர் அடங்கிய குழுவின் ஊடக சுதந்திரமாக இந்த குழு செயற்பட்டதெனவும் டொபி மென்டல் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த ஆவணத்தை சட்டமூலமாக்குவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தன்னால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் அதனை சட்டமூலமாக்கியது உள்நாட்டு குழு ஒன்றேயெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்