உமா ஓயா திட்டத்தின் அகழ்வுப் பணிகள் அனைத்தையும் தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்

உமா ஓயா திட்டத்தின் அகழ்வுப் பணிகள் அனைத்தையும் தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்

உமா ஓயா திட்டத்தின் அகழ்வுப் பணிகள் அனைத்தையும் தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

07 Jul, 2017 | 4:07 pm

உமா ஓயா திட்டத்தில் ஏற்பட்டுள்ள நீர் கசிவைத் தடுக்கும் வரை அங்கு முன்னெடுக்கப்படும் அகழ்வுப் பணிகள் அனைத்தையும் தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அறிக்கை ஒன்றினூடாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சூற்றாடல் அமைச்சு இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளது.

சுரங்கத்தின் கீழ் தட்டுக்களில் காணப்படும் துளையிடும் இயந்திரங்கள் எதிர்வரும் 10 நாட்களுக்குள் அப்புறப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க குறிப்பிட்டார்.

உமா ஓயா திட்டத்தினால் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, பாதிக்கப்பட்டவர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சுவிஸர்லாந்து நிபுணத்துவ ஆலோசகர்களின் பரிந்துரைகளுக்கு அமைய, ஆய்வுகளுக்குத் தேவையான தொழில்நுட்ப உபகரணங்கள் எதிர்வரும் 18 அம் திகதி விமானமொன்றினூடாகக் கொண்டுவரப்படவுள்ளதாகவும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கூறினார்.

இதனைத் தவிர, ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் நாட்டிற்கு வருகைதரவுள்ள நோர்வே நாட்டு நிபுணர்கள், உமா ஓயா திட்டம் தொடர்பில் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளதுடன், சோதனைகளையும் முன்னெடுக்கவுள்ளனர்.

இந்த ஆய்வுகளின் அறிக்கையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி பெற்றுக்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சர்வதேச நாடுகளின் நிபுணர்களின் ஆலோசனைகளையும் உள்நாட்டு நிபுணர்களின் ஆலோசனை மற்றும் பரிந்துரைகளையும் இணைத்து சிறந்த வேலைத்திட்டங்கள் வகுக்கப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு கூறியுள்ளது.

உமா ஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான நட்டஈட்டைப் பெற்றுக் கொடுப்பதற்காக 300 மில்லியன் ரூபா நிதியை பதுளை மாவட்ட செயலாளருக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்