பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு: சந்தேகநபர்களான 5 பொலிஸாரின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு: சந்தேகநபர்களான 5 பொலிஸாரின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு: சந்தேகநபர்களான 5 பொலிஸாரின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

06 Jul, 2017 | 8:04 pm

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் உயிரிழந்த சம்பவத்தின் சந்தேகநபர்களான ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் பிணை கோரிக்கையை யாழ். மேல் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

சந்தேகநபர்களான பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவர் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிணை கோரிக்கை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறும் விசாரணைகளில் அநாவசியமாக மேல் நீதிமன்றம் தலையிட மாட்டாது என்றும், இதுவரை புலன் விசாரணைகள் நிறைவுபெறவில்லை என்பதால் துப்பாக்கிகள் தொடர்பான இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கை கிடைக்கப்பெறவில்லை என்றும் சுட்டிக்காட்டிய நீதிபதி இளஞ்செழியன், சந்தேகநபர்களின் பிணை கோரிக்கைகளை நிராகரித்தார்.

மேலும், சந்தேகநபர்கள் சார்பாக அவர்களின் மனைவிமார் மற்றும் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட பிணை கோரிக்கை மீதான விசாரணையை ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி வரை யாழ். மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

2016 ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவரும் கடந்த 8 மாதங்களாக யாழ். நீதவான் நீதிமன்ற உத்தரவின்பேரில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்