டெங்கு சிகிச்சை நடவடிக்கைகளுக்காக 250 இற்கும் அதிகமான வைத்தியர்கள் கடமையில்

டெங்கு சிகிச்சை நடவடிக்கைகளுக்காக 250 இற்கும் அதிகமான வைத்தியர்கள் கடமையில்

எழுத்தாளர் Staff Writer

06 Jul, 2017 | 1:08 pm

டெங்கு சிகிச்சை நடவடிக்கைகளுக்காக விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட 250 இற்கும் அதிகமான வைத்தியர்களை கடமையில் ஈடுபடுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நீர்கொழும்பு, தலங்கம, வேதர, பாணந்துறை மற்றும் ஐ.டி.எச். ஆகிய வைத்தியசாலைகளில் டெங்கு சிசிச்சைக்கான விசேட பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாளாந்தம் தேசிய வைத்தியசாலையை நாடும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதன் காரணமாக டெங்கு சிகிச்சைக்கான விசேட பிரிவுகளை ஸ்தாபிக்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை, டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் நிலவும் பகுதிகளில் நுளம்புப் பெருக்கம் தொடர்பிலான அறிக்கைகளை பெற்றுக் கொள்வதற்கும் சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்பொருட்டு நுளம்பு குடம்பிகள் தொடர்பிலான ஆராய்ச்சி உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தியுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

ஏற்கனவே கிடைத்துள்ள அறிக்கைகளின் பிரகாரம் பாடசாலைகள், வேலைத்தளங்கள், மதஸ்தளங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் வளாகங்களில் 60 வீதமான நுளம்பு பெருக்கம் பதிவாகியுள்ளது.

எஞ்சிய 40 வீதமான நுளம்புப் பெருக்கம் குடியிருப்புக்களை அண்மித்துக் காணப்படுவதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இது தவிர டெங்கு சிகிச்சைகளுக்காக பயன்படுத்தும் டெக்ஸ்ட்ரன் சேலைன் வகையை தாய்லாந்திலிருந்து கொண்டுவருவதற்கும் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்காக தாய்லாந்து அரசாங்கம் தமது விருப்பத்தை தெரிவித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்