வகுப்பு பகிஷ்கரிப்பைக் கைவிட்டு கற்றலில் ஈடுபடுமாறு மருத்துவப் பீட மாணவர்களுக்கு அமைச்சர் அழைப்பு

வகுப்பு பகிஷ்கரிப்பைக் கைவிட்டு கற்றலில் ஈடுபடுமாறு மருத்துவப் பீட மாணவர்களுக்கு அமைச்சர் அழைப்பு

எழுத்தாளர் Bella Dalima

01 Jul, 2017 | 8:35 pm

தனியார் பல்கலைக்கழகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட மருத்துவப் பீட மாணவர்கள் மீண்டும் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறு உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று கண்டியில் நடைபெற்ற நிகழ்வில் கோரிக்கை விடுத்தார்.

“அண்மையில் கொழும்பு மருத்துவப் பீடத்தில் ஆய்வொன்றை நடத்தினோம். அதில் 95 வீதமானோர் வகுப்புகளுக்குச் செல்ல வேண்டும் எனக்கூறினர். ருஹூணு பல்கலைக்கழகத்திலும் இதே நிலைமை தான். மாணவர்களைப் பயமுறுத்தி செய்யும் இந்த செயற்பாடுகளைத் தாண்டி வகுப்புகளுக்குச் செல்லுமாறு கோருகின்றேன்,” என உயர் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், சைட்டம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்திருந்தார் எனவும் தற்போது அவர் கொண்டிருப்பது சைட்டமுக்கு எதிரான நிலைப்பாடு அல்லவெனவும் குறிப்பிட்ட அமைச்சர், அதிகாரத்தினைப் பெற்றுக்கொள்ளும் அரசியல் தோரணையே அதுவெனவும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, மருத்துவப் பீட மாணவர்கள் இன்று ஊடக சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது, மருத்துவப் பீட விடுதிகளுக்குள் மாணவர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மீண்டும் கற்றல் செயற்பாடுகளில் இணைந்து கொள்வதாக எழுத்து மூலம் அறிவித்ததையடுத்தே விடுதிகளுக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டதாகவும் மருத்துவப் பீட மாணவர் செயற்பாட்டுக் குழு ஏற்பாட்டாளர் ரயன் ஜயலத் குறிப்பிட்டார்.

இந்நிலையில், தனியார் பல்கலைக்கழகங்களுக்கு எதிராக கேட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக கடந்த 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகம் இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்