பஸ் கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு (புதிய கட்டணத் திருத்தம்)

பஸ் கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு (புதிய கட்டணத் திருத்தம்)

எழுத்தாளர் Bella Dalima

01 Jul, 2017 | 6:16 pm

பஸ் கட்டணம் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சாதாரண, அரைச்சொகுசு, சொகுசு பஸ்கள் மற்றும் அதிவேக வீதிகளில் சேவையில் ஈடுபடும் பஸ்களின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்தது.

குறைந்த பஸ் கட்டணம் 9 ரூபாவில் இருந்து 10 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர 12,16, 20, 24, 28 ரூபாவாகக் காணப்பட்ட பஸ் கட்டணம் ஒரு ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது.

32 ரூபா தொடக்கம் 43 ரூபா வரையான பஸ் கட்டணம் இரண்டு ரூபாவாலும், 45 ரூபா தொடக்கம் 54 ரூபா வரையான பஸ் கட்டணம் மூன்று ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 56 தொடக்கம் 74 ரூபா வரையான கட்டணம் 4 ரூபாவாலும், 76 தொடக்கம் 85 ரூபா வரையான கட்டணம் 5 ரூபாவாலும் 87 ரூபா தொடக்கம் 103 ரூபா வரையான கட்டணம் 6 ரூபாவாலும் 105 ரூபா தொடக்கம் 121 ரூபா வரையான கட்டணம் 7 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய பஸ் கட்டண திருத்தத்திற்கமைய, 50 ரூபா வரை பஸ் கட்டணம் அதிகரித்துள்ளது.

அதற்கமைய, 792 ரூபாவாக இருந்த ஆகக்கூடுதலான பஸ் கட்டணம் 842 ரூபாவாக உயர்ந்துள்ளது.

இதேவேளை, அதிவேக வீதியில் மகரகம – காலி வரையான கட்டணம் 410 ரூபாவாகவும், மகரகமயிலிருந்து மாத்தறை வரையான கட்டணம் 500 ரூபாவாகவும், கடுவலை முதல் மாத்தறை வரையான கட்டணம் 520 ரூபாவாகவும், மாத்தறை தொடக்கம் நீர்கொழும்பு வரையான கட்டணம் 670 ரூபாவாகவும் கொழும்பு முதல் மாத்தறை வரையான கட்டணம் 530 ரூபாவாகவும் கடவத்த தொடக்கம் மாத்தறை வரையான கட்டணம் 540 ரூபாவாகவும் கடுவலையில் இருந்து காலி வரையான கட்டணம் 430 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனினும், கொழும்பு – கட்டுநாயக்க புதிய அதிவேக வீதியில் சேவையில் ஈடுபடும் பஸ்களின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்தது.

எவ்வாறாயினும், ரயில் கட்டணங்களில் எவ்வித மாற்றமும் இல்லை என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்