துயர்போக்கும் மக்கள் சக்தி செயற்றிட்டத்தின் அடுத்த பயணம் ஆரம்பம்: 5 இடங்களில் அங்குரார்ப்பணம்

துயர்போக்கும் மக்கள் சக்தி செயற்றிட்டத்தின் அடுத்த பயணம் ஆரம்பம்: 5 இடங்களில் அங்குரார்ப்பணம்

எழுத்தாளர் Bella Dalima

01 Jul, 2017 | 9:20 pm

நம்பிக்கையோடு காத்திருக்கும் மக்களின் வாழ்த்துக்களுடன் மக்கள் சக்தி செயற்றிட்டத்தின் அடுத்த பயணம் இன்று கோலாகலமாக ஆரம்பமானது.

மக்களின் ஏக்கங்களை ஈடேற்றும் வகையில், மக்கள் சக்தி 1000 செயற்றிட்டங்களின் முதற்கட்டம், ஐந்து மாவட்டங்களில் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம், இரத்தினபுரி, மாத்தறை, அநுராதபுரம் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இந்த அங்குரார்ப்பண நிகழ்வுகள் நடைபெற்றன.

இலங்கை வரலாற்றில் சிறந்த சமூகப் பணியாக இடம்பிடித்துள்ள மக்கள் சக்தி செயற்றிட்டம் மக்களின் ஆசியுடனும் ஒத்துழைப்புடனும் தொடர்ந்து வீறு நடை போடுகின்றது.

மக்களுடன் இணைந்து மக்களுக்காக பயணிக்கும் மக்கள் சக்தி திட்டக் குழுவினர், தமது செயற்பாட்டை மேலும் விஸ்தரித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – வரணி வடக்கு பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள குடிநீர்த் திட்டம், மக்கள் சக்தி 1000 செயற்றிட்டத்தினூடாக இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வவுனியா – கற்குளம் மற்றும் கிளிநொச்சி – பெரிய பரந்தன் பகுதிகளைச் சேர்ந்த ‘மக்கள் சக்தி மக்கள் அணி’ உறுப்பினர்களும் இணைந்து கொண்டனர்.

இலங்கைக்கான சுவிஸர்லாந்து தூதுவராலயத்தின் தேசிய நிகழ்ச்சித் திட்டத்திற்கான அதிகாரி சுசாந்தி கோபால கிருஷ்ணன் மற்றும் நியூஸ்பெஸ்ட் உயரதிகாரிகளும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

சமய வழிபாடுகளை அடுத்து குடிநீர் திட்டத்தின் நிர்மாணம் பணிகள் சுபவேளையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதேவேளை, இரத்தினபுரி – பலாங்கொடை பிரதேச செயலகப் பிரிவிற்குரிய பீல்லகும்புர கிராமத்திற்கு செல்லும் வீதியின் நிர்மாணப்பணிகளும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.

மாத்தறை மாவட்டத்தின் திக்வெல்ல பிரதேச செயலகப் பிரிவில் ஊறுகமுவ மெதடிஸ்ட் கல்லூரியின் புனரமைப்புப் பணிகளையும் மக்கள் சக்தி ஏற்றுள்ளது.

அநுராதபுர மாவட்டத்தின் – பதவிய பிரதேச செயலகப் பிரிவில் 40 ஆம் காலனி மக்கள் சுத்தமான குடிநீரின்றி நீண்டகாலமாக சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த கிராமத்தில் வாழும் 150 குடும்பங்களுக்கு நீர் சுத்திகரிப்புக் கட்டமைப்புடன் கூடிய குடிநீர் விநியோகத் திட்டத்தைப் பெற்றுக் கொடுப்பதே மக்கள் சக்தியின் அடுத்த செயற்றிட்டமாகும்.

இந்நிலையில், புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி பிதேச செயலகப் பிரிவில் வாழும் மாம்புரி மக்களின் நீண்டகால குறை ஒன்றை நிவர்த்தி செய்யும் திட்டமும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மீன்பிடித் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள இந்த மக்கள், மீன்பிடித்துறையில் வெளிச்சம் இன்மையால் இரவு வேளைகளில் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் அருகில் இந்த மீன்பிடித்துறை அமைந்துள்ளதுடன், அண்மைக்காலமாக பல படகுகள் விபத்துக்குள்ளானதாக மக்கள் குறிப்பிட்டனர்.

இந்த பிரச்சினைக்குத் தீர்வாக கலங்கரை விளக்கத்தினை அமைக்கும் வகையில், இன்று அதற்கான ஆரம்பப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் உயரதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

துயர்போக்கும் போராட்டத்துடன் கைகோர்த்த பெருந்திரளானவர்களின் தளராத முயற்சி மற்றும் தைரியத்துடன் வெற்றிப்பாதையில் மக்கள் சக்தி செயற்றிட்டம் மேலும் விரிவாக முன்னோக்கி நகர்கிறது.

 

 

19732296_1584170941643158_5327179376009453130_n 19642632_1583935964999989_6031144582361013014_n 19601259_1583935924999993_4956547970863381090_n 19554175_1583865495007036_6590761003900373430_n 19511236_1584169444976641_4581802092350193421_n 19511213_1584154864978099_1856367666200616481_n


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்