அம்பாறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் சிவில் பாதுகாப்புப் படை உறுப்பினர்

அம்பாறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் சிவில் பாதுகாப்புப் படை உறுப்பினர்

எழுத்தாளர் Bella Dalima

01 Jul, 2017 | 7:49 pm

அம்பாறை – இறக்காமம், ஆலையடி சந்தியில் சிவில் பாதுகாப்புப் படை உறுப்பினர் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இறக்காமத்தைச் சேர்ந்த 36 வயதான முஹம்மது நியாஸ் என்பரே நேற்று (30) முதல் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

அநீதியான முறையில் தாம் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

17 வருடகால சேவையில் 14 வருடங்களாக அங்கவீனராக இருந்துகொண்டும் சேவையாற்றி வந்துள்ளதாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள சிவில் பாதுகாப்பு படை உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவரின் குற்றச்சாட்டு தொடர்பில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் W.வர்ணகுலசூரியவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

முறையற்ற விதத்தில் விடுமுறை பெற்றுக்கொண்டதன் காரணமாகவே அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதி கூறினார்.

இந்த நடவடிக்கை தொடர்பில் மேன்முறையீடு செய்யும் பட்சத்தில் அவரை சேவையில் மீள இணைத்துக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

திணைக்களத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் அல்லது வேறு காரணங்களுக்காக அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் W.வர்ணகுலசூரிய குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்