உமா ஓயா திட்டத்தின் ஊழல் மோசடி தொடர்பில் தகவல்கள் கசிவு

உமா ஓயா திட்டத்தின் ஊழல் மோசடி தொடர்பில் தகவல்கள் கசிவு

எழுத்தாளர் Bella Dalima

30 Jun, 2017 | 9:55 pm

உமா ஓயா திட்டத்தினால் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் இன்று பிற்பகல் ஜனாதிபதியின் தலைமையில் விசேட கூட்டம் இடம்பெற்றது.

உமா ஓயா திட்டத்தில் கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல் தொடர்பில் கஃபே அமைப்பின் தலைவர் கீர்த்தி தென்னக்கோன் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தினார்.

கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்ததாவது,

[quote]இலங்கையிலுள்ள சூழலியலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், நீரியல் விசேட நிபுணர்கள் பெரும்பாலானோரின் பங்குபற்றுதலுடன் கனேடிய நிறுவனமான டப்ளின் எனப்படும் ஆலோசனை நிறுவனம் செலவு தொடர்பில் ஒரு மதிப்பீட்டினை மேற்கொண்டது. 2004 – 2005 ஆம் ஆணடு காலப்பகுதியில் இதனை மேற்கொண்டது. இந்த வழிகளுக்கு பதிலாக மாற்று வழிகளை முன்வைத்தனர். மொத்த மதிப்பீட்டு தொகை 155 மில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டது. சில வருடங்கள் செல்லும் போது ராஜபக்ஸ அரசாங்கத்தின் மிகவும் கவர்ச்சிகரமான திட்டமாக இந்த திட்டம் மாறியது. இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 2008 ஆம் ஆண்டாகும்பொழுது ஈரானின் ஒரு குழுவினரும் இலங்கையின் ஒரு குழுவினரும் மதிப்பீடுகளை முன்வைத்தனர். 155 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அன்று மதிப்பிடப்பட்ட கணக்கீடு நான்கு வருடங்களுக்குள் 300 மில்லியனாக அதிகரித்தது. இந்த நடவடிக்கைகள் இவ்வாறு இடம்பெறும் போது, நீரியல்வள அமைச்சராக ஏ.டி.எஸ்.குணவர்த்தனவே இருந்தார். 300 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் நிதி ஒதுக்க முடியாது என தெரிவித்தார். இது ஒரு பெறுமதியான செயற்றிட்டமல்ல. இந்த உமா ஓயா திட்டமானது பாரிய நிதி மோசடியை மேற்கொள்ள ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும்.[/quote]

இந்த செயற்றிட்டத்திற்காக பொறியியலாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மதிப்பீடுகளில் கலந்து கொண்டதுடன், அதன்போது அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட மதிப்பீட்டில் மொத்த மதிப்பீடு 548 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என குறிப்பிடப்பட்டது.

இந்த செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது சமல் ராஜபக்ஸவே விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்டகால செயற்பாடுகள் தொடர்பில் மீள ஆய்வு செய்யாமல் இது தொடர்பில் கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது என அப்போதைய மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் சரித்த ஹேரத் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்