தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாகக் கைவிடப்பட்டது

தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாகக் கைவிடப்பட்டது

தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாகக் கைவிடப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

30 Jun, 2017 | 3:50 pm

நாடு முழுவதும் கடந்த மூன்று நாட்களாக தபால் ஊழியர்கள் மேற்கொண்டு வந்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று காலை 6 மணியுடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

பிரதமர் செயலகத்தில் நேற்று (29) மாலை நடைபெற்ற கலந்துரையாடலின் போது தங்களின் கோரிக்கைகள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டதை அடுத்து, பணிப்பகிஷ்கரிப்பைக் கைவிட தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார குறிப்பிட்டார்.

இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக பணிப்பகிஷ்கரிப்பைக் கைவிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த காலப்பகுதிக்குள் தமது கோரிக்கைகள் தொடர்பில் உரிய தீர்வு கிடைக்கும் என தாம் எதிர்பார்த்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார மேலும் தெரிவித்தார்.

தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நாடளாவிய ரீதியில் இலட்சக்கணக்கான கடிதங்கள் தபால் நிலையங்களில் தேங்கிக் கிடப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றை விநியோகிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தபால்துறை அமைச்சர் ஏ.எச்.எம். ஹலீம் குறிப்பிட்டார்.

கண்டி, நுவரெலியா மற்றும் காலி கோட்டை தபால் நிலையங்களை சுற்றுலா விடுதிகளாக அபிவிருத்தி செய்வதை உடன் நிறுத்துதல், கொழும்பு கோட்டை ஜனாதிபதி வீதியிலுள்ள மத்திய தபால் பரிமாற்றகத்தில் தபால் நிலையமொன்றை ஸ்தாபித்தல், 2006 ஆம் ஆண்டு சுற்றுநிரூபத்திற்கு அமைய ஊழியர்களை இணைத்துக்கொள்ளும் செயற்பாடுகளில் தபால் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களை நிவர்த்தி செய்தல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்