சுவிஸிலுள்ள மாஃபியா குழுவிற்காக வித்தியாவின் கூட்டு வன்புணர்வு ஔிப்பதிவு செய்யப்பட்டதாக சாட்சியம்

சுவிஸிலுள்ள மாஃபியா குழுவிற்காக வித்தியாவின் கூட்டு வன்புணர்வு ஔிப்பதிவு செய்யப்பட்டதாக சாட்சியம்

எழுத்தாளர் Bella Dalima

30 Jun, 2017 | 7:29 pm

சுவிஸிலுள்ள மாஃபியா குழுவொன்றின் தேவைக்காக வித்தியாவின் கூட்டு வன்புணர்வு ஔிப்பதிவு செய்யப்பட்டதாக மன்றில் இன்று சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கின் தொடர் விசாரணை மூன்றாவது நாளாக இன்றும் நடைபெற்றது.

மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கின் Trial at Bar விசாரணை, மேல் நீதிமன்ற நீதிபதிகளான மாணிக்கவாசகர் இளஞ்செழியன், அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோருடன் பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

விசேட வழக்கு தொடுநரான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார ரட்ணம் மற்றும் யாழ். மேல் நீதிமன்ற அரசதரப்பு சட்டத்தரணி நிஷாந்த் நாகரட்ணம் ஆகியோர் இந்த வழக்கில் ஆஜராகியுள்ளனர்.

Trial at Bar முறையிலான விசாரணையில், ஆறாவது சாட்சியாளரிடம் இன்று சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு நண்பகல் 12 மணியுடன் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆறாம் இலக்க சாட்சியாளரின் சாட்சிப்பதிவுகளை அடுத்து, சந்தேகநபர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் சாட்சியாளரிடம் குறுக்குக் கேள்விகளைத் தொடுத்துள்ளனர்.

நிதி மோசடி தொடர்பில் பிறிதொரு வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மென்பொருள் தயாரிப்பு பொறியியலாளர் ஒருவரே இன்று மன்றில் சாட்சியமளித்துள்ளார்.

வவுனியா சிறைச்சாலையில் தான் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, வித்தியாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சுவிஸ் குமாருடன் தமக்கு தொடர்புகள் ஏற்பட்டதாக சாட்சியாளர் தெரிவித்துள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இந்த வழக்கை நெறிப்படுத்தும் பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிசாந்த டி. சில்வா, வவுனியா சிறைச்சாலையில் தன்னை சந்தித்துக் கலந்துரையாடியதை அவதானித்த சுவிஸ் குமார், அவருடனான கலந்துரையாடல் குறித்து தம்மிடம் வினவியதாக ஆறாம் இலக்க சாட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.

மென்பொருளைப் பயன்படுத்தி அழிக்கப்பட்ட காணொளிகளை மீள தரவிறக்கம் செய்ய முடியுமா என சுவிஸ் குமார் தன்னிடம் வினவியதாகவும், தன்னால் செய்ய முடியும் என கூறியதாகவும் ஆறாம் இலக்க சாட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பு இடம்பெற்ற மறுநாள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தன்மீது தொடரப்பட்டுள்ள பிறிதொரு வழக்கிற்கு அதிகாரிகள் அழைத்து சென்றதாகவும் 15 நாட்களின் பின்னர் மீண்டும் தன்னை வவுனியா சிறைச்சாலைக்கு மாற்றியதாகவும் ஆறாவது சாட்சியாளர் கூறியுள்ளார்.

தான் வவுனியா சிறைச்சாலைக்கு சென்றதன் பின்னர் பதற்றத்துடன் சுவிஸ் குமார் தன்னை சந்தித்துக் கலந்துரையாடியதாக அவர் மன்றில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

ஏன் நாட்கள் கடந்தது எனவும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனரா எனவும் சுவிஸ் குமார் தன்னிடம் வினவியதாகவும், அதற்கு தன்னை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சந்தித்துப் பேசியதாக அவரிடம் கூறியதாகவும் சாட்சியத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த விசாரணைகள் தொடர்பில் ஏனைய 8 சந்தேகநபர்களுக்கு தெரியப்படுத்த வேண்டாம் எனவும் சுவிஸ் குமார் தன்னிடம் கேட்டுக்கொண்டதாக ஆறாவது சாட்சியாளர் கூறியுள்ளார்.

இதேவேளை, தான் அரச தரப்பு சாட்சியாளராக மாறுவதற்கு விருப்பமாகவுள்ளதாகவும் அதனை பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிசாந்த டி. சில்வாவிற்கு தெரிவிக்குமாறும் சுவிஸ் குமார் ஆறாவது சாட்சியாளரிடம் தெரிவித்துள்ளார்.

அரச தரப்பு சாட்சியாளராக மாறினால் தான் விடுதலையாகி சுவிசர்லாந்துக்கு திரும்பிச் செல்ல முடியும் எனவும், இதற்கு இரண்டு கோடி ரூபா வழங்க முடியும் எனவும் சுவிஸ் குமார் கூறியுள்ளார்.

இந்த விடயங்களை ஆறாவது சாட்சியாளர் பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிசாந்த டி. சில்வாவிடம் கூறியதை அடுத்து, தொடர்ந்தும் சுவிஸ் குமாருடன் கலந்துரையாடி மேலதிகத் தகவல்களைப் பெறுமாறு அவர் பணித்துள்ளார்.

இதன் பின்னர், காணொளி பதிவு செய்தமை தொடர்பில் ஒன்பதாவது சந்தேகநபரான சுவிஸ் குமாரிடம் ஆறாவது சாட்சியாளர் வினவியுள்ளார்.

20 வயதிற்கு உட்பட்ட அழகான பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திக் கொலை செய்து, அதனை நேரடியாக ஔிப்பதிவு செய்து தருமாறு சுவிஸிலுள்ள மாஃபியா குழுவொன்று கேட்டிருந்ததாக சுவிஸ் குமார் தெரிவித்ததாக ஆறாவது சாட்சியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்திற்கு புங்குடுதீவிலுள்ள ஒருவர் தனக்கு உதவியதாகவும் கைது செய்யப்பட்டுள்ள ஆறாவது சந்தேகநபரே உதவி புரிந்ததாகவும் கூறி வவுனியா சிறைச்சாலைக்குள் வைத்து அவரையும் சுவிஸ் குமார் அடையாளம் காட்டியுள்ளார்.

அந்த சந்தேகநபரை இன்று உங்களால் அடையாளங்காட்ட முடியுமா என நீதிபதி ஆறாவது சாட்சியாளரிடம் கோரியுள்ளார்.

இன்றைய சாட்சியமளிப்பின் போது குறித்த சந்தேகநபரை சாட்சியாளர் அடையாளம் காட்டியுள்ளார்.

அன்றைய தினம் பதிவு செய்யப்பட்ட காணொளி கூகுள் ட்ரைவ் ஊடாக சுவிஸுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு கொழும்பிலிருந்து உதவிகள் கிடைத்ததாகவும் இன்று சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடைபெற்ற போது தான் கொழும்பிலிருந்ததாகவும் வித்தியாவை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமைக்கும் தனக்கும் எவ்வித தொடர்பில் இல்லை என சுவிஸ் குமார் குறிப்பிட்டதாகவும் ஆறாவது சாட்சியாளர் சாட்சியமளித்துள்ளார்.

எனினும், வித்தியா கொலை செய்யப்பட்டதன் பின்னரே தான் யாழ்ப்பாணத்திற்கு சென்றதாகவும் பொலிஸாரால் தான் கைது செய்யப்பட்டதன் பின்னர் யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் அரசியல்வாதி ஒருவரின் தம்பியின் செல்வாக்கில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் உதவியுடன் கொழும்பிற்கு தப்பிச்சென்றதாகவும் சுவிஸ் குமார் தன்னிடம் கூறியதாக ஆறாவது சாட்சியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிசாந்த டி சில்வாவிடம் வாக்குமூலம் வழங்கியதாவும் ஆறாவது சாட்சியாளர் கூறியுள்ளார்.

எனினும், தான் வாக்குமூலம் வழங்கியதை அறிந்துகொண்ட சுவிஸ் குமார், தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாகவும், இந்த விடயம் தொடர்பில் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் தான் அறிவித்திருந்ததாகவும் சாட்சியமளித்துள்ளார்.

இதேவேளை, வித்தியாவை பாலியல் துஷ்பிரயோகம் செய்து, கொலை செய்ய தெரிவு செய்யப்பட்ட பாழடைந்த வீடு தன்னுடையது என சுவிஸ் குமார் கூறியதாக ஆறாவது சாட்சியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த வீட்டுக்கு அருகில் கடற்படை முகாம் அமைந்துள்ளதாகவும் இந்த கொலையை கடற்படையினர் மேற்கொண்டதாக குற்றஞ்சாட்ட முடியும் எனவும் அவர்கள் திட்டமிட்டுள்ளமை மன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, சாட்சியாளரிடம் சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் 3 பேர் குறுக்குக் கேள்விகளைக் கேட்டுள்ளனர்.

குறுக்குக் கேள்விகள் நிறைவு பெற்றதை அடுத்து, வழக்கு விசாரணை எதிர்வரும் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்