வித்தியா படுகொலை வழக்கின் தொடர் விசாரணை ஆரம்பம்: திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின

வித்தியா படுகொலை வழக்கின் தொடர் விசாரணை ஆரம்பம்: திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின

எழுத்தாளர் Bella Dalima

28 Jun, 2017 | 8:52 pm

சுவிட்சர்லாந்தில் உள்ள நிறுவனமொன்றுக்கு காணொளியை விற்பனை செய்வதற்காக புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதாக பதில் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா இன்று அறிவித்துள்ளார்.

யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்று ஆரம்பமான Trial at Bar விசாரணைகளின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான மாணிக்கவாசகர் இளஞ்செழியன், அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோருடன் பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில், வித்தியா படுகொலை வழக்கின் விசாரணை இன்று ஆரம்பமானது.

விசேட வழக்கு தொடுநரான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார ரட்ணம் மற்றும் யாழ். மேல் நீதிமன்ற அரசதரப்பு சட்டத்தரணி நிஷாந்த் நாகரட்ணம், மன்னார் மேல் நீதிமன்ற சட்டவாதி ஷகிப் ஸ்மாயில், அரச சட்டத்தரணி லக்சி இ சில்வா மற்றும் வவுனியா மேல் நீதிமன்ற அரச சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் ஆகியோர் இந்த வழக்கில் ஆஜராகினர்.

சந்தேகநபர்களுக்கு எதிரான திருத்தப்பட்ட 41 குற்றச்சாட்டுக்களும் இன்று பகிரங்க நீதிமன்றத்தில் மீண்டும் வாசிக்கப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், குற்றவாளியா, சுற்றவாளியா என நீதிபதிகள் வினவியபோது, ஒன்பது சந்தேகநபர்களும் தாம் சுற்றவாளிகள் என கூறியுள்ளனர்.

வழக்கின் ஐந்தாவது சந்தேகநபர் மீது சுமத்தப்பட்டுள்ள 41 குற்றச்சாட்டுக்களையும் Trial at Bar முறையில் விசாரிக்க முடியாது என அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த பதில் சட்ட மா அதிபர், இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் Trial at Bar -க்கு உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று, நீதிமன்றத்தில் ஆஜரான பதில் சட்ட மா அதிபர் இந்த கொலையின் முக்கிய சூத்திரதாரி, சுவிஸ் குமார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மாணவி வித்தியாவை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும் காட்சிகளை நேரடியாகப் பதிவு செய்து சர்வதேச நாடுகளில் விற்பனை செய்யும் நோக்கத்துடன் அவர் சுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளதாகவும் பதில் சட்ட மா அதிபர் கூறியுள்ளார்.

இதற்காக சுவிட்சர்லாந்திலுள்ள ஒரு நிறுவனத்துடன் அவர் ஒப்பந்தம் செய்திருந்ததாக யாழ். மேல் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் உள்ள சிறுவயது பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வு மூலம் ஆபாசப்படம் எடுத்து சர்வதேச சந்தையில் விற்பனை செய்யும் ஒப்பந்தத்தை 9 ஆவது எதிரி சுவிஸ் குமார் மேற்கொண்டிருந்த நிலையில், துரதிர்ஷ்டவசமாக பாடசாலை மாணவி வித்தியா கொடுமையான, மிருகத்தனமான, கேவலமான பாலியல் வல்லுறவுக்கொலை மூலம் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் ஒன்பது சந்தேகநபர்களும் மாணவி வித்தியாவை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகவும் அவர்களே மாணவியைக் கொலை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேசத்துடன் இணைந்து காட்டுமிராண்டித்தனமான இந்தக் கொடூரம் இழைக்கப்பட்டதாகவும் நாட்டிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில், இந்த சம்பவம் இடம்பெற்றதைக் கூறுவதில் தமக்கு தயக்கம் இல்லை எனவும் பதில் சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.

சதித்திட்டத்துடனான ஆட்கடத்தல், சதித்திட்டத்துடனான கூட்டு பாலியல் வல்லுறவு, சதித்திட்டத்துடனான கொலை என்பவற்றைப் புரிந்த முக்கிய சூத்திரதாரிகள் 2 ஆம் 3 ஆம் 5 ஆம் 6 ஆம் இலக்க சந்தேகநபர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நால்வரும் குற்றம் புரிவதற்கு, ஏனையவர்கள் குற்ற உடந்தைகளாக இருந்துள்ளதாக பதில் சட்ட மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயங்களுக்கான ஆதாரம் சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் இருப்பதாகவும் விசாரணைகளின்போது அவற்றை சமர்ப்பிப்பதாகவும் பதில் சட்ட மா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வித்தியா பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் அவரின் கழுத்தை, இவர்கள் திருகி கொலை செய்தமை பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

மாணவியின் தலையின் பின்புறத்திலும் உடலின் பல இடங்களிலும் பலத்த காயங்கள் இருந்ததை சட்ட வைத்திய அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளதாக பதில் சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.

துஷ்பிரயோக சம்பவம் இடம்பெற்றபோது ஐந்தாம், ஆறாம் சந்தேகநபர்கள் தொடர்ச்சியாக கையடக்கத் தொலைபேசியில் அதனைப் பதிவு செய்து, இரண்டு காணொளிகளையும் இணைத்து முழுமையான காணொளியொன்றைத் தயாரித்துள்ளதாக பதில் சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த காணொளி ஏற்கனவே ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட சுவிஸ் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

துஷ்பிரயோக சம்பவம் ஒளிப்பதிவு செய்யப்பட்டமைக்கான ஆதாரத்தை மன்றில் சமர்ப்பிக்க முடியும் எனவும் பதில் சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் புலன் விசாரணையில் ஈடுபட்டிருந்த அதிகாரியொருவருக்கு சிறைச்சாலையிலிருந்த சுவிஸ் குமார் 20 மில்லியன் ரூபாவை இலஞ்சமாகக் கொடுப்பதற்கு முயற்சித்ததாகவும் அதற்கான ஆதாரம் தம்மிடமுள்ளதாகவும் பதில் சட்ட மா அதிபர் யாழ். மேல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பான வழக்கு தனியொரு வழக்காக பதிவு செய்யப்படும் என்பதையும் பதில் சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்றதன் பின்னர், சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை சிலர் பாதுகாக்க முயற்சித்து வந்ததாகவும், பாதுகாக்க முயன்றவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பதில் சட்ட மா அதிபர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று நண்பகல் விசாரணை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டபோது, சுமார் 4 மணித்தியாலங்கள், வித்தியாவின் தாயாரான சிவலோகநாதன் சரஸ்வதி கண்ணீர்மல்க சாட்சியமளித்துள்ளார்.

இதன்போது, அரச பகுப்பாய்வுத் திணைக்களம் அனுப்பி வைத்த 16 சான்றுப் பொருட்களை சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள் ஒவ்வொன்றாகப் பிரித்து அவற்றை அடையாளம் காணுமாறு, வித்தியாவின் தாயாரிடம் கேட்டுக் கொண்டனர்.

இந்தப் பொருட்கள் அனைத்தும் தனது மகளுடையது என சிவலோகநாதன் சரஸ்வதி அடையாளம் காண்பித்துள்ளார்.

மாணவி வித்தியாவின் கிழிந்த சீருடை, காண்பிக்கப்பட்டபோது, அவரது தாயார் நீண்ட நேரம் கதறியழுதுள்ளார்.

வழக்கின் இரண்டாம், மூன்றாம் மற்றும் ஆறாம் சந்தேகநபர்கள் சார்பில் அரச சட்டத்தரணி மஹிந்த ஜயவர்தன சிவலோகநாதன் சரஸ்வதியிடம் குறுக்கு விசாரணை நடத்தியுள்ளார்.

ஐந்தாம் சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஆறுமுகன் ரகுபதி குறுக்கு விசாரணை நடத்தியபோது, வழக்கு விசாரணைக்குத் தேவையான கேள்விகளை மாத்திரம் கேட்குமாறு மூன்று நீதிபதிகளும் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

நான்காம், ஏழாம் மற்றும் ஒன்பதாம் இலக்க சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறுக்கு விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், சாட்சியாளர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள 36 பேரில் 32 ஆவது சாட்சியாளரைக் கைது செய்து நாளை மறுதினம் (30) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வழக்கின் 11ஆவது சந்தேகநபர் தனது மகளின் திருமணத்திற்காக இந்தியா செல்வதற்கு விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் தலா ஒரு இலட்சம் ரூபா ஆள் பிணையிலும், ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் செல்வதற்கு அனுமதியளித்தது.

கடந்த வழக்கு விசாரணையின்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கமைய, யாழ். மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிகள் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து சந்தேகநபர்களை யாழ். சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் அனுமதியளித்துள்ளது.

இதற்கமைய, சந்தேகநபர்கள் ஒன்பது பேரும் நாளை (29) வரை யாழ். சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கின் தொடர் விசாரணை நாளை காலை 9.30க்கு மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை வரலாற்றில் இதுதான் முதற்தடவையாக மூன்று நீதிபதிகள் அடங்கிய Trial at Bar விசாரணை வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதாக பதில் சட்ட மா அதிபர் தனது ஆரம்ப உரையில் குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்