உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பண்டாரவளையில் எதிர்ப்பு நடவடிக்கை: ரயில் போக்குவரத்து பாதிப்பு

உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பண்டாரவளையில் எதிர்ப்பு நடவடிக்கை: ரயில் போக்குவரத்து பாதிப்பு

எழுத்தாளர் Bella Dalima

28 Jun, 2017 | 9:48 pm

உமா ஓயா திட்டம் மூலம் தாம் தொடர்ந்தும் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லையெனத் தெரிவித்து பண்டாரவளை நகரில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதுடன் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

உமா ஓயா அழிவுத் திட்டத்திற்கு எதிரான மக்கள் முன்னணி இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

இன்று காலை முதல் பண்டாரவளை நகரில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்ததுடன், பாடசாலைகளும் அரச அலுவலகங்களும் மூடப்பட்டிருந்தன.

அதன் பின்னர் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.

உமா ஓயா திட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்டுள்ள பண்டாரவளை மற்றும் அதனை அண்மித்த 42 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

காலை 9 மணிக்கு பண்டாரவளை சந்தியிலும், எட்டம்பிட்டிய வீதியிலும் பேரணியாகச் சென்ற மக்கள் நகர மத்தியில் ஒன்றுகூடினர்.

இதன்போது, மக்கள் மத்தியில் உரையாற்றுவதற்கு மக்கள் விடுதலை முன்னணியின் ஊவா மாகாண உறுப்பினர் சமந்த வித்யாரத்ன தயாராகையில் அங்கு வந்த சிலர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியும் அங்கிருந்தார்.

இதேவேளை, இன்று முற்பகல் கொழும்பில் இருந்து பதுளை நோக்கிப் பயணித்த ரயிலை பண்டாரவளை ரயில் நிலையத்திற்கு அருகில் மறித்து மக்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.

பின்னர் ஊவா மாகாண ஆளுநரின் செயலாளர் அவ்விடத்திற்கு வந்து பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் 30 ஆம் திகதி ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதாக வழங்கிய உறுதிமொழியை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்