காணாமற்போனோர் அலுவலகம் தொடர்பான சட்டமூலத்திற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன

காணாமற்போனோர் அலுவலகம் தொடர்பான சட்டமூலத்திற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன

எழுத்தாளர் Bella Dalima

23 Jun, 2017 | 7:13 pm

காணாமற்போனோர் பற்றிய அலுவலகம் தொடர்பான சட்டமூலத்திற்கு பாராளுமன்றத்தில் சில யோசனைகளும் திருத்தங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

காணாமற்போனோர் பற்றிய அலுவலகம் தொடர்பான சட்டமூலத்தின் பாகம் இரண்டில் அதன் தத்துவங்கள், கடமைகள் மற்றும் பணிப்பாணைகள் விபரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, ‘காணாமற்போன ஆட்களைத் தேடிக்கண்டுபிடித்தலும் அதற்கான வழிமுறைகளை அடையாளம் காணலும்’ எனும் விடயம் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமற்போன நபர் உயிருடன் இருப்பின் அவருக்கும் அவரின் உறவினர்களுக்கும் அறிவித்தல் எனும் விடயம் சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது.

பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், காணாமற்போனவர் எங்குள்ளார், காணாமற்போனமைக்கான சூழல் என்பன தொடர்பில் விசாரணையொன்றையோ அல்லது புலனாய்வொன்றையோ ஆரம்பித்தல் குறித்து இதில் விபரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சந்தேகிக்கப்பட்ட புதைகுழிகளை அகழ்வதற்கு நீதிமன்றத்திடம் விண்ணப்பிக்கவும், அகழ்வின்போது அவதானிப்பாளராக செயற்படவும் முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையம் அல்லது மறியற்சாலையினுள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என சந்தேகிக்கப்படும் இடத்தினுள் எந்நேரத்திலும் ஆணையின்றி பிரவேசிப்பதற்கும் பரிசோதனைகளைச் செய்வதற்கும் முடியும் என இந்த சட்டமூலத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, காணாமற்போனவர்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்துக்கள் விமர்சனத்திற்குள்ளாகின.

அத்துடன், காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவான கட்டமைப்போ அல்லது பொறுப்புக்கூறலுக்கான அமைப்போ அல்லவென அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் நேற்று முன்தினம் (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அத்துடன், சிவில் அல்லது குற்றவியல் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனவும், தகவல் அறியும் சட்டத்தின் கீழோ அல்லது நீதிமன்ற செயற்பாட்டின் ஊடாகவோ தகவல்களைப் பெற முடியாது எனவும் அமைச்சர் நேற்று (22) தெரிவித்திருந்தார்.

இதேவேளை, காணாமற்போனோர் தொடர்பான புதிய அலுவலகம் ஸ்தாபிக்கப்படும் முன்னர் சட்டமூலத்திலுள்ள குறைபாடுகள் நிவர்த்திக்கப்பட வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்