அஸ்கிரிய பீடத்தின் அறிக்கையை விமர்சித்துள்ளார் தம்பர அமில தேரர்

அஸ்கிரிய பீடத்தின் அறிக்கையை விமர்சித்துள்ளார் தம்பர அமில தேரர்

எழுத்தாளர் Bella Dalima

22 Jun, 2017 | 7:53 pm

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட செயற்குழு வெளியிட்ட அறிக்கை தொடர்பில் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பர அமில தேரர் விமர்சித்துள்ளார்.

[quote]அந்த அறிக்கையில் ஞானசார தேரரின் செயற்பாடுகளுக்கு தாம் இணங்குவதில்லை என்றாலும் அவரின் கொள்கையை ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளனர். செயற்பாட்டிற்கு இணங்குதல் அல்லது இணங்காமை முக்கியம் அல்ல. கொள்கையே முக்கியமானது. அந்தக் கொள்கை சமாதானத்தை சீர்குலைத்து நல்லிணக்கத்தை இல்லாமல் செய்து மீண்டும் 30 வருட யுத்தத்திற்கு எம்மை எடுத்துச் செல்வதாக இருந்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது[/quote]

என தம்பர அமில தேரர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கூறக்கூடாத ஒரு கருத்தையே அஸ்கிரிய தேரர் வெளியிட்டுள்ளார் எனவும் தற்போது தேவைப்படுவது அவ்வாறான அறிக்கைகள் அல்லவெனவும் சுட்டிக்காட்டியுள்ள தம்பர அமில தேரர், 30 வருட யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதே அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.

ஞானசார தேரரின் செயற்பாடுகள் சிறந்தவையல்ல எனவும் புத்த தர்மம் அவ்வாறான விடயங்களைப் போதிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரர் முஸ்லிம் பள்ளிகள் மீதும், முஸ்லிம் மக்கள் மீதும், தமிழ் மக்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளுமாறு கூறும் கருத்துக்களினால் பௌத்த தர்மம் பிரகாசிக்காது எனவும் தம்பர அமில தேரர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு செய்தால் சர்வதேச மட்டத்தில் மேற்கத்தேய உலகில் பௌத்த தர்மத்தினைக் கற்றுக்கொள்ளும் சமூகம், இந்த தர்மத்துடன் நெருங்கமாட்டார்கள் என தெரிவித்துள்ள தேரர், இதுவா புத்த தர்மம் என்று கேட்பார்கள் எனவும் கூறியுள்ளார்.

[quote]அவ்வாறான செயற்பாடுகளை காவி உடை அணியாமல் ஒருவர் செய்தால் பாதுகாப்புத் தரப்பினர் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். காவி உடை அணிந்து ஒருவர் செயற்படும் போது பாதுகாப்புத் தரப்பினரும் சிரமங்களுக்குள்ளாகின்றனர். பௌத்த தர்மம் இதனையா போதிக்கின்றது என்ற கேள்வி சமூகத்தில் ஏற்படும். இந்த பௌத்த தர்மத்தினை பாதுகாக்க வேண்டுமாக இருந்தால் புத்த பெருமான் கூறும் விதத்தில் செயற்பட வேண்டும். அவர் மனிதநேயங்களைப் போதித்துள்ளார். இன மத பேதங்களை அவர் போதிக்கவில்லை[/quote]

என்றும் தம்பர அமில தேரர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (21) நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே தேரர் இக்கருத்துக்களை வெளியிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்