நானு ஓயாவில் டிப்பரில் மோதுண்டு உயிரிழந்த சிறுமியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

நானு ஓயாவில் டிப்பரில் மோதுண்டு உயிரிழந்த சிறுமியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

எழுத்தாளர் Bella Dalima

16 Jun, 2017 | 8:05 pm

நானு ஓயாவில் டிப்பரில் மோதுண்டு உயிரிழந்த சிறுமியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நானு ஓயாவில் பாதசாரிகள் கடவையினூடாக வீதியைக் கடக்க முற்பட்ட 6 வயது சிறுமி மீது டிப்பர் வண்டியொன்று மோதி நேற்று (15) காலை இந்த விபத்து இடம்பெற்றது.

இதன்போது சம்பவ இடத்திலேயே சிறுமி உயிரிழந்தார்.

இதனையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.

சிறுமியின் சடலம் மீதான பிரேதப் பரிசோதனைகள் நிறைவு செய்யப்பட்டதை அடுத்து, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுமியின் சடலம் நாளை ரத்தெல்ல கீழ்ப்பிரிவில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இதேவேளை, நானு ஓயா பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 7 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

டிப்பர் வண்டி மோதி சிறுமி உயிரிழந்த சந்தர்ப்பத்தில் பொலிஸார் முன்னெடுத்த நடவடிக்கை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

மத்திய மாகாண உதவி பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஐந்து பேரும், பொலிஸ் சாரதிகள் இரண்டு பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்