சி.வி.விக்னேஷ்வரனுக்கு ஆதரவாக 15 மாகாண சபை உறுப்பினர்கள் கையொப்பம்; வடக்கில் ஹர்த்தால்

சி.வி.விக்னேஷ்வரனுக்கு ஆதரவாக 15 மாகாண சபை உறுப்பினர்கள் கையொப்பம்; வடக்கில் ஹர்த்தால்

எழுத்தாளர் Bella Dalima

16 Jun, 2017 | 9:43 pm

வட மாகாண சபையில் ஏற்பட்டுள்ள சர்ச்சை மேலும் வலுப்பெற்று வருகின்றது.

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து, வட மாகாண சபை உறுப்பினர்களின் கையொப்பத்துடனான கடிதமொன்று, மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவிடம் நேற்றிரவு கையளிக்கப்பட்டது.

எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையிலான மூவரடங்கிய குழு, வட மாகாண ஆளுநர் இல்லத்திற்கு நேற்றிரவு சென்று, ஆளுனர் ரெஜினோல்ட் குரேவை சந்தித்தனர்.

இதன்போது, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்களின் கையொப்பத்துடனான கடிதமொன்று ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.

இந்தக் கடிதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகிய கட்சிகளின் 15 உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த எம்.கே.சிவாஜிலிங்கம், ஞா. குணசீலன், விந்தன் கனகரத்தினம், அ. புவனேஸ்வரன், செ.மயூரன் ஆகியோரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பாக எம். தியாகராசா, இரா.இந்திரராஜா, து.ரவிகரன், கே.சர்வேஸ்வரன், பொ. ஐங்கரநேசன் ஆகியோரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் சார்பில் க.சிவநேசன் மற்றும் க.லிங்கநாதன் ஆகியோரும் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக பா.கஜதீபன், அனந்தி சசிதரன் மற்றும் சி.வி.விக்னேஷ்வரனும் இந்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

வட மாகாண அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன் மற்றும் த.குருகுலராசா ஆகியோர் தமது பதவிகளைத் தியாகம் செய்ய வேண்டும் எனவும் விசாரணைகள் முடிவடையும் வரை அமைச்சர்களான பா.டெனீஸ்வரன் மற்றும் ப.சத்தியலிங்கம் ஆகியோர் விடுமுறையில் செல்ல வேண்டும் எனவும் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் கடந்த புதன்கிழமை சபையில் அறிவித்தார்.

இதனை அடுத்து, முதலமைச்சரை பதவி நீக்கி புதிய முதலமைச்சரை நியமிக்க வேண்டும் என்ற நம்பிக்கையில்லாப் பிரேரணை அன்றைய தினம் இரவு ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளிக்கப்பட்டது.

வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 17 பேர் நேற்று முன்தினம் இரவு ஆளுநர் அலுவலகத்திற்கு சென்று, முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்பித்தனர்.

வட மாகாண சபையின் 18 உறுப்பினர்கள் அதில் கையொப்பமிட்டுள்ளதாகவும், மேலும் 3 பேர் அதற்கு ஒப்புதலளித்துள்ளதாகவும் வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சி தலைமையில் சில எதிர்க்கட்சிகள் இணைந்து வட மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வட மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் தாம் கையொப்பமிடவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா நேற்று தெரிவித்திருந்தார்.

அத்துடன், பெரும்பான்மை ஆதரவு கிடைக்கும் பக்கத்திற்கு தாம் ஆதரவு வழங்குவதாகவும் வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

 

 

இந்நிலையில், இரு தரப்பினரின் கடிதங்களையும் பெற்றுக்கொண்ட வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, இது குறித்து சட்ட நடவடிக்கைகளை எடுக்க தாம் தீர்மானித்துள்ளதாகவும், இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தால் தீர்மானமொன்றை எடுக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.

 

 

இதேவேளை, வட மாகாண முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். மாவட்டத்தில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதுடன், மாவட்டத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன.

அத்துடன், அங்கு பொதுப்போக்குவரத்து சேவைகளும் ஸ்தம்பிதமடைந்திருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர்கள் கூறினர்.

யாழ். மாவட்டத்தின் பல பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்திருந்தன.

பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை குறைவாகக் காணப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் கூறினர்.

முல்லைத்தீவு மாவட்டத்திலும், வட மாகாண முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியா வடக்கு பிரதேசத்திலுள்ள கடைகள் அனைத்தும் இன்றைய தினம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

இந்நிலையில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து, வவுனியா மற்றும் கிளிநொச்சியிலும் இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் வட மாகாண முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா மத்திய பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், வட மாகாண சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள், சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை, வட மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தி கிளிநொச்சியில் மற்றுமொரு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாவட்டத்திலுள்ள இளைஞர்களும் பொது அமைப்புக்களும் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

 

 

இதேவேளை, வட மாகாண முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் மக்கள் பேரவையினால் இன்று கவனயீர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

யாழ். நல்லூரில் இந்த கவனயீ்ர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர் நல்லூரில் இருந்து ஆரம்பித்த பேரணி முதலமைச்சர் இல்லத்தை சென்றடைந்தது.

இந்தப் பேரணியில் தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகள், பொது அமைப்புகள், யாழ். பல்கலைக்கழக சமூகம் என்பன கலந்து கொண்டிருந்தன.

முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

 

 

யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வி செயற்பாடுகளும் இன்று ஸ்தம்பிதமடைந்திருந்தன.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் சிலரும் இன்று வட மாகாண முதலமைச்சரை சந்தித்து தமது ஆதரவினைத் தெரிவித்திருந்தனர்.

 

*வடமாகாண அரசியல் நெருக்கடி தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர், முதலமைச்சரிடம் நியூஸ்பெஸ்ட் கேள்வி

 

*வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் நியூஸ்பெஸ்ட்டிற்கு வழங்கிய விசேட செவ்வி

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்