வட மாகாண முதல்வருக்கு எதிரான நடவடிக்கைகளை தமிழர் விடுதலைக் கூட்டணி கண்டித்துள்ளது

வட மாகாண முதல்வருக்கு எதிரான நடவடிக்கைகளை தமிழர் விடுதலைக் கூட்டணி கண்டித்துள்ளது

வட மாகாண முதல்வருக்கு எதிரான நடவடிக்கைகளை தமிழர் விடுதலைக் கூட்டணி கண்டித்துள்ளது

எழுத்தாளர் Bella Dalima

15 Jun, 2017 | 6:33 pm

வட மாகாண முதலமைச்சருக்கு எதிராக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் தமிழர் விடுதலைக் கூட்டணி வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளது.

வட மாகாண சபையின் தற்போதைய நிகழ்வுகளால் தமிழ் மக்கள் வெட்கித் தலைகுனியும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதி, நேர்மை, ஒழுக்கம், கல்வியறிவு என பல வகையிலும் சிறந்து விளங்கிய யாழ்ப்பாண சமூகத்தின் தலைவர்கள் இன்று தலை குனிந்து நிற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்லோரும் ஒரு குடையின் கீழ் வர வேண்டும் என்று விடுதலைப்புலிகள் விரும்பியிருந்த காலத்தில் கிளிநொச்சியில் சதித்திட்டம் தீட்டி ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் பாழடித்தவர்கள், இன்றும் இந்த வெட்கம்கெட்ட அரசியல் நிலைமைக்கு காரணகர்த்தாவாக உள்ளதாகவும் வீ.ஆனந்தசங்கரி கூறியுள்ளார்.

ஊழல், மோசடி குற்றச்சாட்டு வெளிவந்தவுடனேயே நான்கு அமைச்சர்களும் இராஜினாமா செய்திருக்க வேண்டும் எனவும் அல்லது கட்சித்தலைவர் அவர்களை இராஜினாமா செய்யுமாறு கேட்டிருக்க வேண்டும் எனவும் அரசியல் நாகரீகத்தை அவ்வாறானவர்களிடம் எதிர்பார்க்க முடியாது எனவும் கூட்டணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அரசியலுக்கு புதியவர்கள் என்றாலும் அரசியலுக்குள் வந்தவுடன் எவ்வாறு ஊழல் மோசடி செய்யலாம் என்று அவர்கள் எங்கோ கற்றுக்கொண்டு வந்துள்ளதாகவும் வீ.ஆனந்தசங்கரி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

பதவியைக் கட்டிப்பிடித்துக்கொண்டு, இராஜினாமா செய்ய மறுக்கும் இவர்கள் தமிழ் மக்களுக்கு எவ்வாறு சேவை செய்ய முடியும் எனவும் வீ.ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு நீதியரசர் முதலமைச்சராக இருந்து தன்னுடைய தூய்மையான, நேர்மையான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒரு தீர்வை முன் வைத்துள்ளார். அதற்கேற்றவாறு அமைச்சர்கள் நடந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் அரசியலுக்கு வந்தது ஒரு வரப்பிரசாதம் எனவும், சகல அமைப்புக்களையும் ஒன்றிணைத்து தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தலைமை தாங்கும்படி கேட்டுக்கொண்டுள்ளதாகவும் வீ.ஆனந்தசங்கரி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்