நம்பிக்கையில்லா பிரேரணையில் உள்ள கையொப்பங்கள் சுயவிருப்பின் பேரில் இடப்பட்டவையா? வடமாகாண ஆளுனர்

நம்பிக்கையில்லா பிரேரணையில் உள்ள கையொப்பங்கள் சுயவிருப்பின் பேரில் இடப்பட்டவையா? வடமாகாண ஆளுனர்

நம்பிக்கையில்லா பிரேரணையில் உள்ள கையொப்பங்கள் சுயவிருப்பின் பேரில் இடப்பட்டவையா? வடமாகாண ஆளுனர்

எழுத்தாளர் Staff Writer

15 Jun, 2017 | 1:19 pm

தன்னிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளவர்கள், சுய விருப்பின் பேரில் கையெழுத்திட்டுள்ளனரா என்பது குறித்து ஆராயவுள்ளதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்துள்ளார்.

வட மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம் நேற்றிரவு கையளிக்கப்பட்டது.

தம்மிடம் கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் அதில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் உண்மையில் அவர்களுடைய சுய விருப்பின் பேரில் கையெழுத்திட்டுள்ளார்களா என்பது தொடர்பில் தாம் ஆராய வேண்டும் எனவும் தனிப்பட்ட ரீதியில் அவர்கள் ஒவ்வொருவரிடமும் சத்தியக்கடதாசியை தாம் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் வடமாகாண ஆளுனர் குறிப்பிட்டுள்ளார்.

சத்தியக்கடதாசியின் பிரகாரம் மாகாண சபையின் பெரும்பான்மையினர் அதில் கையொப்பம் இட்டிருந்தால், அதற்கமைய மாகாண சபையை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான பலம் முதலமைச்சருக்கு இல்லை என தான் நினைக்கும் பட்சத்தில் அது தொடர்பில் முதலமைச்சருக்கு அறிவித்து, சபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அவருக்கு அறிவிக்கப்படும் என ஆளுனர் தெரிவித்தார்.

தனக்கு பெரும்பான்மை ஆதரவு காணப்படுவதாக முதலமைச்சர் நிரூபிக்கும் பட்சத்தில் அவரால் தொடர்ந்தும் பதவியில் நீடிக்க முடியும் எனவும் பெரும்பான்மையை நிரூபிக்காவிடின் முதலமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் தெரிவித்த ஆளுனர் அதன் பின்னர் அடுத்த முதலமைச்சர் தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும் என குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் இந்த விடயங்களை ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறவுள்ளதாகவும் அரசியல் அமைப்பின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

இதேவேளை இந்த பிரேரணையில் வட மாகாண சபையின் 18 உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாகவும், மேலும் மூன்று பேர் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் நியூஸ் பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த 17 பேர் நேற்றிரவு ஆளுனர் அலுவலகத்திற்கு சென்று, ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம் நம்பிக்கையில்லா பிரேரணையை கையளித்துள்ளனர்.

வட மாகாண அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன் மற்றும் த.குருகுலராசா ஆகியோர் தமது பதவிகளை தியாகம் செய்ய வேண்டும் எனவும், விசாரணைகள் முடிவடையும் வரை அமைச்சர்களான பா.டெனீஸ்வரன் மற்றும் ப.சத்தியலிங்கம் ஆகியோர் விடுமுறையில் செல்ல வேண்டும் எனவும் முதலமைச்சர் நேற்று சபையில் அறிவித்த பின்னரே, முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்