தூரம் பாராது ஆசிரியர்கள் கற்பிக்காவிட்டால் நியமனங்கள் மீள் பரிசீலிக்கப்படும்: விக்னேஷ்வரன்

தூரம் பாராது ஆசிரியர்கள் கற்பிக்காவிட்டால் நியமனங்கள் மீள் பரிசீலிக்கப்படும்: விக்னேஷ்வரன்

எழுத்தாளர் Bella Dalima

10 Jun, 2017 | 8:14 pm

கணித, விஞ்ஞான, தொழில்நுட்பப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.

யாழ். இந்துக்கல்லூரி சபாலிங்கம் மண்டபத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது 219 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், ஆசிரியர்கள் தமக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று கற்பித்தலில் ஈடுபட வேண்டும் என குறிப்பிட்ட சி.வி.விக்னேஷ்வரன், வீட்டருகில் பாடசாலை அமைந்தால் நல்லதென நினைக்கும் ஆசிரியர்களால் பாதிக்கப்படுவது மாணவர்கள் தான் என சுட்டிக்காட்டினார்.

மேலும், கல்வித் திணைக்கள விசேட குழுவின் பாடசாலை விஜயத்தின் போது, நியமனம் பெற்ற ஆசிரியர்களின் கற்பித்தல் செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லையென கண்டறியப்பட்டால், அவர்களின் நியமனங்கள் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் எனவும் சி.வி.விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்தியாவில் கல்வி பயின்று விசேட சித்தி பெற்றவர்கள் வட மாகாணத்தில் எங்கு வேண்டுமானாலும் பணியாற்றத் தயார் நிலையில் உள்ளதாகவும் தமக்கு பணி நியமனம் வழங்குமாறு கோரியுள்ளதாகவும், தூரத்தைக் காரணம் காட்டும் ஆசிரியர்கள் இதனைக் கவனத்தில் கொண்டு செயற்படுமாறும் வட மாகாண முதல்வர் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்