சீர்திருத்தப்பட்ட அமைச்சுக்களுக்கான விடயப் பரப்புக்கள் அதிவிசேட வர்த்தமானியில் அறிவிப்பு

சீர்திருத்தப்பட்ட அமைச்சுக்களுக்கான விடயப் பரப்புக்கள் அதிவிசேட வர்த்தமானியில் அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

10 Jun, 2017 | 3:40 pm

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை சீர்திருத்தத்திற்கு அமைய அமைச்சுக்களுக்கான விடயப் பரப்புக்கள் அதிவிசேட வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளன.

நிதி மற்றும் வெகுசன ஊடகம், அபிவிருத்திப் பணிப் பொறுப்புக்கள், வெளிவிவகாரம், காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு ஆகிய அமைச்சுக்களுக்கான விடயப் பரப்புக்கள் இந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதற்கமைய, இதுவரை காலமும் நிதி அமைச்சின் கீழ் இருந்த அபிவிருத்தி லொத்தர் மற்றும் தேசிய லொத்தர் சபை ஆகியன வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த விடயங்களுக்கு மேலதிகமாக வெளிநாடுகளில் உள்ள தூதரக குழுக்கள், லக்ஸ்மன் கதிர்காமர் சர்வதேச உறவுகள், தேசிய கடல்சார் செயற்குழுச் செயலகம் என்பனவும் வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

மங்கள சமரவீர அமைச்சராகப் பதவியேற்றுள்ள நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் 33 நிறுவனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இலங்கை மத்திய வங்கி அல்லது அரச வங்கிகள் அந்த அமைச்சின் கீழ் உள்வாங்கப்படாமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை சுங்கம், மதுவரித் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஆகியன அந்த அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

திறைசேரி, அரச நிதித் திணைக்களம், அரச கணக்குகள் திணைக்களம் என்பனவும் நிதி அமைச்சின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளன.

தேசிய கொள்கைத் திட்டத்திற்கு அமைய, அரச வரி மற்றும் நிதி வருமானம் என்பவற்றுக்கான திட்டங்களை வகுத்தல் மற்றும் தொடராய்வு என்பன நிதி அமைச்சுக்கு உரியவை என்ற போதிலும், தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களைத் தயாரிக்கும் விடயம் பிரதமரின் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக வருமானம் சேகரித்தல், செலவு பற்றிய தொடராய்வு, வாழ்வாதார அபிவிருத்தியை இலக்காகக்கொண்ட தேசிய கொள்கைகளைத் தயாரித்தல் ஆகிய விடயப் பரப்புக்களும் பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்னதாக இந்த விடயங்கள் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சிடம் இருந்தன.

கந்தளாய் சீனி நிறுவனம் தொடர்ந்தும் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சுக்கு சொந்தமான நிறுவனமாக நீடிக்கும் என அதிவிசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச அச்சகத் திணைக்களம், தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம், வரையறுக்கப்பட்ட அச்சகக் கூட்டுத்தாபனம் ஆகியன வெகுசன ஊடக அமைச்சிடமிருந்து நீக்கப்பட்டு, ரஞ்சித் மத்துமபண்டார அமைச்சராகப் பதவி வகிக்கும் பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவின் சமூக வலுவூட்டல் நலன்புரி அமைச்சின் கீழ் கண்டி மரபுரிமை பாதுகாப்பு மற்றும் விருத்தி என்ற விடயம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தொழில் மற்றும் தொழில்சங்க உறவுகள் அமைச்சிடம் சப்ரகமுவ மாகாணத்தினுள் விசேட கருத்திட்டங்களைத் திட்டமிடலும் செயற்படுத்தலும் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்த அமைச்சுக்குப் பொறுப்பாக அமைச்சர் W.D.J.செனவிரத்ன செயற்படுகின்றார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்