கூட்டணிக்கட்சி ஆதரவுடன் ஆட்சியமைக்க தெரசா மே-க்கு அனுமதியளித்தார் எலிசபெத் மகாராணி

கூட்டணிக்கட்சி ஆதரவுடன் ஆட்சியமைக்க தெரசா மே-க்கு அனுமதியளித்தார் எலிசபெத் மகாராணி

கூட்டணிக்கட்சி ஆதரவுடன் ஆட்சியமைக்க தெரசா மே-க்கு அனுமதியளித்தார் எலிசபெத் மகாராணி

எழுத்தாளர் Bella Dalima

10 Jun, 2017 | 5:18 pm

பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் அரசாங்கம் அமைக்கப் போதுமான பெரும்பான்மையை இழந்த கன்சர்வேட்டிவ் கட்சி பிரதமர் தெரசா மே தலைமையில் கூட்டணிக் கட்சி ஆதரவுடன் அங்கு மீண்டும் புதிய அரசாங்கத்தை அமைக்க இங்கிலாந்து மகாராணி எலிசபெத் அனுமதி வழங்கியுள்ளார்.

பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலின் பிரகாரம், பிரதமர் தெரசா மே தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் ஜெர்மி கார்பின் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும் இடையில் போட்டி நிலவியது.

தேர்தல் முடிவுகளின் பிரகாரம் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதைத் தொடர்ந்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியானது ஜனநாயக ஒன்றியக் கட்சியுடன் இணைந்து கூட்டணியாட்சி அமைக்கிறது.

இது தொடர்பாக ராணி இரண்டாம் எலிசபெத்தை, பிரதமர் தெரசா மே நேற்று (09) சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகியவை அடங்கிய பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

கடந்த மே 2 ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு பிரதமர் தெரேசா மே முன்கூட்டியே தேர்தலை அறிவித்தார்.

அதன்படி 650 உறுப்பினர்கள் கொண்ட பிரித்தானிய பாராளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் நேற்று முன்தினம் (08) நடைபெற்றது.

அதன் முடிவுகள் நேற்று காலை வெளியாகின.

ஆட்சியமைக்க 326 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 318 இடங்கள் கிடைத்தன.

முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 261 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

பிரதமர் தெரசா மே தென்கிழக்கு இங்கிலாந்து தொகுதியிலும் தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரோமி கார்பின், ஐஸ்லிங்டன் வடக்கு தொகுதியிலும் வெற்றி பெற்றனர்.

பிரதமர் தெரசா மே உட்பட மிக அதிகபட்சமாக 207 பெண் உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் தெரசா மே நேற்று பக்கிங்ஹாம் அரண்மனையில் ராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

எனினும் தெரசா மே – க்கு அவரது கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு எழுந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனிடையே தொழிலாளர் கட்சி இதர கட்சிகளோடு இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்