இரண்டு கோடி ரூபா மதிப்புள்ள ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது

இரண்டு கோடி ரூபா மதிப்புள்ள ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

10 Jun, 2017 | 7:22 pm

மேல் மாகாண ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் 20 மில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட பெறுமதியுடைய ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொழும்பு ஆமர் வீதி மற்றும் கெஸ்பாவ ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேல் மாகாண ஊழல் ஒழிப்புப் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, ஒரு வாரமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, கெஸ்பாவ பகுதியில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை 567 கிராம் ஹெரோயினுடன் கைது செய்துள்ளனர்.

ஆமர் வீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 1 கிலோ 272 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஹெரோயினின் சந்தைப் பெறுமதி இரண்டு கோடி ரூபாவாகும்.

இதேவேளை, யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையில் நேற்று (09) பிற்பகல் 5.5 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில், காங்கேசன்துறை கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான பொதியொன்றைக் கண்டுபிடித்தனர்.

அப்பொதியிலிருந்த 5.5 கிலோகிராம் ஹெரோயின் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இதேவேளை, யாழ்ப்பாணம் – தொண்டமனாறு பகுதியில் 56.6 கிலோகிராம் கேரளக்கஞ்சா இன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 1.30 அளவில் கடற்படையினரால் கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் சமிந்த வலாகுலுகே தெரிவித்தார்.

பொதியிடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடற்படையினர் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையில் கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கேரளக்கஞ்சா காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்