வவுனியா பஸ் தரிப்பிடத்தில் மோதல்: தனியார் பஸ் நடத்துனர் கைது

வவுனியா பஸ் தரிப்பிடத்தில் மோதல்: தனியார் பஸ் நடத்துனர் கைது

எழுத்தாளர் Bella Dalima

08 Jun, 2017 | 9:28 pm

வவுனியாவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஊழியர்களுக்கும் தனியார் பஸ் ஊழியர்களுக்கும் இடையில் இன்று முறுகல் ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் தனியார் பஸ் ஊழியரொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் சேவை நேர முகாமைத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இன்று காலை 10.30 அளவில் இரு தரப்பிற்கும் இடையில் முறுகல் ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

வாய்த்தர்க்கம் வலுவடைந்ததை அடுத்து ஏற்பட்ட மோதல் காரணமாகக் காயமடைந்த இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா டிப்போ ஊழியர் ஒருவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்குப் பயணிக்கும் தனியார் பஸ்ஸில் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்த போது, அங்கு சென்ற இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த சம்பவம் வவுனியா பழைய பஸ் தரிப்பிடத்தில் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, 195 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள வவுனியா புதிய பஸ் தரிப்பு நிலையம் பயனற்றுக் காணப்படுகின்றமை தொடர்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஒருங்கிணைந்த நேர அட்டவணையை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட முறுகலை அடுத்து, புதிய பஸ் தரிப்பிடத்தில் பஸ்களைத் தரிப்பதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வட மாகாண போக்குவரத்து அமைச்சு இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா டிப்போ பஸ்கள், டிப்போ வளாகத்திலிருந்தே சேவையை ஆரம்பிக்கின்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்