கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை மேலும் மூன்று நாடுகள் துண்டித்தன

கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை மேலும் மூன்று நாடுகள் துண்டித்தன

எழுத்தாளர் Bella Dalima

06 Jun, 2017 | 7:58 pm

கடும்போக்கு இஸ்லாம் தீவிரவாத குழுக்களுக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டின் பேரில், கட்டாருடனான இராஜதந்திர உறவுகளைத் துண்டிக்க 7 நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளன.

கட்டாருடனான அனைத்து இராஜதந்திர உறவுகளையும் இடைநிறுத்துவதற்கு நான்கு நாடுகள் நேற்றைய தினம் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், இன்று மேலும் மூன்று நாடுகள் அதில் இணைந்து கொண்டன.

லிபியா, யேமன் மற்றும் மாலைத்தீவுகள் ஆகிய நாடுகளே இன்று கட்டாருடனான இராஜதந்திர உறவுகளைத் துண்டித்துள்ளன.

இந்த நாடுகள் அமெரிக்காவின் நேச நாடுகள் என்பதுடன், ஜனாதிபதி ட்ரம்பின் மத்திய கிழக்கு விஜயம் இந்த திடீர் தடைகளுக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கடும்போக்குவாத பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி வழங்கியதாகக் கூறி, ஒரு சில மணித்தியாலங்களுக்குள் எவ்வித முன் அறிவித்தலுமின்றி மத்திய கிழக்கு பிராந்தியத்தின் செல்வாக்கு மிக்க நான்கு நாடுகள் கட்டாருக்கு எதிரான நிலைப்பாட்டினை எடுத்தன.

அண்மையில் கட்டார் அரசு, ஜிகாத் கடுப்போக்குவாதிகளுக்கு பெருந்தொகை நிதியை வழங்கியதாக ஃபைனான்ஸியல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது

சிரியாவின் கடும்போக்குவாத குழுக்களுக்கு கட்டார் ஆயுதங்களை வழங்குவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் விஜயம் இடம்பெற்ற வாரத்திலேயே சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் என்பன கட்டார் செய்தித் தளங்களுக்கு தடை விதித்தன.

இந்த நான்கு நாடுகளுடன் யேமன், லிபியா மற்றும் மாலைத்தீவுகள் என்பன கட்டார் அரசுடனான போக்குவரத்தை முற்றாகத் துண்டிப்பதற்கு இன்று தீர்மானித்துள்ளன.

இதற்கமைய, கட்டார் அரசுக்கான விமான சேவைகளை எதிஹாட், ஃப்ளை துபாய், எமிரேட்ஸ், எயார் அரேபியா ஆகிய விமான நிறுவனங்கள் இடைநிறுத்தியுள்ளன.

அத்தோடு, கட்டாரில் இருந்து திரும்புவோர் மற்றும் கட்டாருக்கு செல்வோர் இந்த 7 நாடுகளினதும் வான், கடல் மற்றும் தரை வழி மார்க்கங்களைப் பயன்படுத்தவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த 7 நாடுகளிலும் கடமையாற்றும் கட்டார் இராஜதந்திரிகள் 48 மணித்தியாலங்களில் வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருக்கும் கட்டார் பிரஜைகள் 14 நாட்களுக்குள்ளும், சவுதி அரேபியா மற்றும் பஹ்ரேனிலுள்ள கட்டார் பிரஜைகள் 21 நாட்களுக்குள்ளும் வெளியேற வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மசகு எண்ணெய் மற்றும் எரிவாயுக் களஞ்சியங்களால் நிறைந்த செல்வந்த நாடுகளில் மூன்றாவது இடத்திலுள்ள கட்டார் அரசு, உலகின் அதிக தனி நபர் வருமானமுடைய நாடாகக் கருதப்படுகின்றது.

கட்டார் சனத்தொகையில் 25 வீதமானவர்கள் இந்திய பிரஜைகள் என்பதுடன், 5.6 வீதமானவர்கள் இலங்கையர்களாவர்.

அங்கு 1,45,256 இலங்கையர்கள் வசிக்கின்றனர்.

கட்டாரின் தொழிற்படையில் 90 வீதமானவர்கள் வெளிநாட்டவர்கள்.

முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட உணவு வகைகளை நம்பி வாழும் கட்டார், 50 வீதமான உணவை சவுதி அரேபியா ஊடாக எடுத்துச்செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

2022 ஆம் ஆண்டில் உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரை நடத்துவதற்கான வாய்ப்பும் ஏற்கனவே கட்டாருக்குக் கிடைத்துள்ளது.

எவ்வாறாயினும், 7 பலம் பொருந்திய நாடுகளால் நிராகரிக்கப்பட்ட கட்டார், இன்னமும் தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ளவில்லை.

கட்டாரில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை அடுத்து, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள வணிக வங்கிக்கிளைகள் கட்டார் ரியால் பரிமாற்றத்தைத் தற்காலிகமாக நிறுத்தியதுடன், இன்று பகல் பணப்பரிமாற்றம் மீள ஆரம்பிக்கப்பட்டது.

கட்டார் ரியாலை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என வணிக வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை நிராகரிப்பதாக மத்திய வங்கி அறிக்கையொன்றை விடுத்துள்ளது.

கட்டாரில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள் சிலர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில், கட்டார் ரியாலை இலங்கை ரூபாவுக்கு பரிமாற்ற முடியாமல் சிரமத்திற்குள்ளாகினர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்