வடமாகாண அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களின் விசாரணை அறிக்கை விரைவில் சமர்ப்பிப்பு

வடமாகாண அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களின் விசாரணை அறிக்கை விரைவில் சமர்ப்பிப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Jun, 2017 | 8:24 pm

வடமாகாண அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்த குழுவின் அறிக்கை விரைவில் வட மாகாண சபையில் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த குழுவின் அறிக்கை நாளை (06) அல்லது நாளை மறுதினம் (07) சபையில் சமர்பிக்கப்படலாம் என வடமாகாண சபையின் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் அமைச்சர்களுக்கு எதிராக பல்வேறு தரப்பினராலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்காக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மூவரடங்கிய குழுவொன்றை நியமித்திருந்தார்.

ஓய்வு பெற்ற நீதிபதிகள் இருவரும் எஸ்.தியாகேந்திரன். எஸ்.பரமராஜா மற்றும் முன்னாள் அரசாங்க அதிபர் எஸ்.பத்திநாதன் ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகித்தனர்.

இந்த குழுவிடம் வடமாகாண சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை சமர்ப்பித்திருந்தனர்.

இந்த குழுவின் அறிக்கையை, அடுத்த மாகாண சபை அமர்வில் சமர்பிப்பதாக வடமாகாண சபை முதலமைச்சர் அண்மையில் கூறியிருந்தார்.

இந்த குழுவின் விசாரணை நிறைவுபெற்றுள்ள நிலையில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் 4 அமைச்சர்களுக்கும் முதலமைச்சரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுதுரை ஐங்கரநேசன் மற்றும் மாகாண கல்வி அமைச்சர் ரி.குருகுலராசா ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என விசாரணை அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடமாகாண அமைச்சர்கள் தொடர்பில் குறித்த குழுவிடம் முறைப்பாடுகளை முன்வைத்திருந்த மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனிடம் இது தொடர்பில் வினவினோம்.

இதேவேளை, இன்று நடைபெற்ற நிகழ்வொன்றிலும் இது தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்