தாஜூடீன் கொலை: முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க பிணையில் விடுவிப்பு

தாஜூடீன் கொலை: முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க பிணையில் விடுவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

02 Jun, 2017 | 8:39 pm

ரக்பி வீரர் வசீம் தாஜூடீனின் கொலை தொடர்பான தகவல்களை மறைத்த குற்றச்சாட்டில் ஒரு வருடம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அவரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிணை மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து பிணை வழங்கப்பட்டுள்ளது.

10 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் 50 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் அநுர சேனாநாயக்க ஆஜராக வேண்டும் எனவும் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிணை வழங்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவிற்கு வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவருடைய கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சாட்சியாளர்களை அச்சுறுத்தினாலோ, விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்தாலோ அநுர சேனாநாயக்கவிற்கான பிணை இரத்து செய்யப்படும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ரக்பி வீரர் வசீம் தாஜூடீனின் கொலை தொடர்பில் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க கடந்த வருடம் மே மாதம் 23 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்