சிறுமிகள் துஷ்பிரயோகம்: மட்டக்களப்பில் எதிர்ப்புப் பேரணி, திருமலையில் கல்வி செயற்பாடுகள் ஸ்தம்பிதம்

சிறுமிகள் துஷ்பிரயோகம்: மட்டக்களப்பில் எதிர்ப்புப் பேரணி, திருமலையில் கல்வி செயற்பாடுகள் ஸ்தம்பிதம்

எழுத்தாளர் Bella Dalima

02 Jun, 2017 | 8:21 pm

திருகோணமலை – மூதூர், பெருவெளி பகுதியில் மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பாரிய அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கிழக்கின் இருவேறு பகுதிகளில் இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மூதூர் – மல்லிகைத்தீவு சந்தியில் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மல்லிகைத்தீவைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள், பொதுமக்கள் என பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இதேவேளை, சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அம்பாறை, ஆலையடிவேம்பு பகுதியில் கண்டனப் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.

ஆலையடிவேம்பு ஶ்ரீ இராமகிருஷ்ண தேசிய பாடசாலை மாணவர்கள் ஒன்றிணைந்து பாடசாலை வளாகத்தில் இந்த கண்டனப் பேரணியை முன்னெடுத்திருந்தனர்.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மாணவர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் கல்வி செயற்பாடுகள் முடக்கப்பட்டிருந்தன.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் மாணவர்கள் இன்று சமூகமளிக்கவில்லை என கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஷாம் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்