மூதூரில் சிறுமிகள் மூவர் துஷ்பிரயோகம்: மட்டக்களப்பில் கண்டனப் பேரணிகள் முன்னெடுப்பு

மூதூரில் சிறுமிகள் மூவர் துஷ்பிரயோகம்: மட்டக்களப்பில் கண்டனப் பேரணிகள் முன்னெடுப்பு

எழுத்தாளர் Bella Dalima

01 Jun, 2017 | 7:23 pm

திருகோணமலை – மூதூர், பெருவெளி பகுதியில் மூன்று மாணவிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து மட்டக்களப்பு நகரிலும் வாழைச்சேனையிலும் இன்று கண்டனப் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன.

வாழைச்சேனை பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமான கண்டனப் பேரணி வாழைச்சேனை மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இருந்து பொலிஸ் நிலையம் வரை சென்றது.

வாழைச்சேனை ஆலய நிர்வாகத்தினர், சிவில் அமைப்புகள், பெற்றோர்கள், மகளிர் சமூக அபிவிருத்தி சங்கத்தினர், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் என பலரும் பேரணியில் பங்குபற்றியிருந்தனர்.

இதன்போது பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராகவும் நீதிகோரியும் பல்வேறு கோஷங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பினர்.

கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி நிறைவில், வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் மஹஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இதேவேளை, மூன்று மாணவிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து காந்தி பூங்கா வரை பேரணியொன்று இடம்பெற்றது.

பின்னர் காந்தி பூங்காவிற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று அடையாள அணிவகுப்பு நடைபெறவிருந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிகள் மன்றில் ஆஜர்படுத்தப்படாமையால் எதிர்வரும் ஜூன் மாதம் 5 ஆம் திகதிக்கு அடையாள அணிவகுப்பு ஒத்திவைக்கப்பட்டது.

ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு சந்தேகநபர்களுடன் மற்றுமொரு சந்தேகநபர் அடங்கலாக ஐந்து பேர் மூதூர் நீதவான் ஐ.என்.ரிஸ்வான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்