வௌ்ளத்தால் அதிக பாதிப்பிற்குள்ளானது மாத்தறை: முப்படையினரின் மீட்புப் பணிகள் தொடர்கிறது

வௌ்ளத்தால் அதிக பாதிப்பிற்குள்ளானது மாத்தறை: முப்படையினரின் மீட்புப் பணிகள் தொடர்கிறது

எழுத்தாளர் Staff Writer

28 May, 2017 | 8:14 pm

சீரற்ற வானிலை காரணமாக மாத்தறை மாவட்டம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் பல பகுதிகளில் தற்போது தேங்கியிருந்த வௌ்ள நீர் வடிந்தோடுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

நில்வளா கங்கை பெருக்கெடுத்தமையினால் நேற்று (27) மாத்தறை மற்றும் அதனை அண்மித்த பகுதிகள் வௌ்ளக்காடாக காட்சியளித்தன.

தற்போது இந்தப் பகுதகளில் நீர் வடிந்தோடுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் வௌ்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் வேகமாக இடம்பெறுவதுடன், மாத்தறை, வல்பொல, வேரகம ஆகிய பிரதேசங்களில் வௌ்ளத்தில் சிக்கியிருந்த 500 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் படகுகள் மூலம் இன்று மீட்கப்பட்டனர்.

மீட்கப்பட்டவர்களில் 36 பேர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மற்றையவரக்ள் வேரகம்பிடிய விஹாரையில் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.

இதேவேளை மாத்தறை அக்குரஸ்ஸ அதிவேக வீதியில் நுழைவாயிலை அண்மித்த பகுதி இன்று மதிய வேளையிலும் 8 அடிக்கு நீர் நிரம்பிக் காணப்பட்டது.

 

தென் மாகாணாத்தின் காலி மாவட்டத்தில் பத்தேகம, உடுகம உள்ளிட்ட பல பகுதிகளும் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

பத்தேகம நகரம் வௌ்ளத்தினால் மூழ்காதிருக்கும் வகையில் ஜிங் கங்கை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட அணைக்கட்டு நேற்று இரவு இவ்வாறு சேதமடைந்துள்ளது.

இதேவேளை காலி பத்தேகம வீதியில் கிங்கங்கைக்கு குறுக்காக உள்ள வக்வெல்ல பாலத்திற்கு கீழால் கழிவுப் பொருட்கள் நிறைந்துள்ளமையினால் நீர் வடிந்து செல்ல முடியாத நிலை தொடர்பில் நியூஸ்பெஸ்ட் நேற்று (27) சுட்டிக்காட்டியிருந்தது.

 

அதன் பின்னர் அங்கு குவிக்கப்பட்டிருந்த குப்பைகளை அகற்றுவதற்கு இலங்கை கடற்படையின் மெரின் படையணி இன்று காலை நடவடிக்கை எடுத்தது.

காலி – உடுகம பிரதேசத்தில் வெள்ளம் தற்போது வற்றியுள்ளதுடன், இன்று பிரதேச மக்கள் சுத்தீகரிப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

உடுகம பிரதேசத்தில் வௌ்ளம் வடிந்தோடியுள்ள போதிலும், கமகொட கல்லன்தல பிரதேசத்தில் தொடர்ந்தும் நான்கு அடி உயரத்திற்கு நீர் நிரம்பிக்காணப்படுகிறது.

கிங்கங்கையின் நீர் மட்டம் படிப்படியாக குறைவடைந்து செல்லும் போது தாழ்நிலப்பகுதியில் உள்ள வக்வெல்ல பகுதி நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை மாவட்டமும் வௌ்ளம், மண் சரிவினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

பிரதேசத்தில் மழை பெய்யாத போதிலும், தொடர்ந்தும் ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்துச் செல்வதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

வௌ்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக விமானப்படையினர் கடுகுருந்த விமானப்படை முகாமில் இருந்து விமானம் மூலம் படகுகளில் அந்தப் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.

களுகங்கையின் நீர் மட்டம் குறைவடைந்து செல்லும் போது பதுரலிய, மகுருகஹ ஆகிய பிரதேசங்கள் வௌ்ளத்தில் மூழ்கியிருந்தன.

மதுகம கொழும்பு பிரதான வீதியில் தொடங்கொட பிரதேசம் இன்று காலை வௌ்ளதில் மூழ்கியிருந்தது.

இந்த பிரதேசத்தில் 20 வருடங்களுக்குப் பின்னர் இவ்வாறு அனர்த்தம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக மதுகம கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டிருந்தது.

ஹொரனை பனாபிடிய பிரதேசம் இன்று காலை நீரில் மூழ்கிக் காணப்பட்டது.

களுத்துறை கல்பான பிரதேசத்தில் இன்று பகல்வேளையில் 12 அடி உயரத்திற்கு நீர் காணப்பட்டதுடன், கடற்படையினர், விமானப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து வௌ்ளததில் சிக்கியிருந்த மக்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

 

இரத்தினபுரி மாவட்டத்தில் வௌ்ளப் பெருக்கினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மண் சரிவினால் பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ளன.

சில பகுதிகளில் வௌ்ளம் வடிந்தோடியுள்ள போதிலும், பல பகுதிகள் இன்னும் நீரில் மூழ்கியுள்ளன.

இன்று பகல் வேளையிலும் இரத்தினபுரியை சூழவுள்ள தாழ்நிலைப்பகுதிகளில் 8 முதல் 10 அடி வரை நீர்நிரம்பிக் காணப்பட்டது.

முப்படையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட நிவாரணக் குழுக்கள் இணைந்து மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

கலவான இன்னும் நீரில் மூழ்கியுள்ளதுடன், கலவானை வைத்தியசாலையின் நோயாளர்கள் இன்று ஹெலிகொப்டர் மூலம் இரத்தினபுரி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

 

களனி கங்கையை அண்மித்த பகுதியில் காணப்பட்ட வௌ்ள அபாயம் தற்போது குறைவடைந்துள்ள போதிலும் தொம்பே, மாபிடிகம மற்றும் மல்வானையின் சில பகுதிகள் தொடர்ந்தும் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்