மண்சரிவு மற்றும் வௌ்ளத்தில் சிக்கி 23 பேர் உயிரிழப்பு

மண்சரிவு மற்றும் வௌ்ளத்தில் சிக்கி 23 பேர் உயிரிழப்பு

மண்சரிவு மற்றும் வௌ்ளத்தில் சிக்கி 23 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

26 May, 2017 | 1:50 pm

களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் வௌ்ளம் மற்றும் மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

இரத்தினபுரி நகரம் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளது.

களு கங்கை பெருக்கெடுத்ததால் இரத்தினபுரி நகரம் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதக மேலதிக மாவட்ட செயலாளர் தயானந்த கொலம்பகம தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் மாத்திரம் கடும் மழையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஐந்து இடங்களில் ஏற்பட்ட மண் சரிவுகளில் சிக்கியே இவர்கள் உயிரிழந்துள்ளதாக மேலதிக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி நகரில் வௌ்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளுக்கு படகுகள் தேவைப்படுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

களுத்துறையில் இருவேறு பகுதிகள் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

களுத்துறை கொபவக்க கந்த பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு பதுரலிய மாவத்த வத்த பகுதியில் இடம்பெற்ற மண் சரிவில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

சபுகஸ்கந்த பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

43 மற்றும் 73 வயதான இரு பெண்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரத்தினபுரி கஹவத்த மடலகம ஜனபத பகுதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிழந்த்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

43 வயதான ஒருவரே வீதியில் செல்லும் போது முறிந்து வீழ்ந்த மரத்தில் சிக்கி உயிரிழந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

மண்சரிவு மற்றும் வௌ்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளுக்கு விமானப்படையின் விசேட ஹெலிகொப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தெனியாய பகுதியில் ஏற்பட்ட மண் சரிவினால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதேவேளை, மலையகத்தின் அநேகமான பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகின்றது.

ஹட்டன் செனன் தோட்டத்தில் இன்று காலை மண் மேடு ஒன்று சரிந்து வீழ்ந்ததில் வீடொன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று காலை மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் அந்த பாதையூடான போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன் பதுளை – கொழும்பு ரயில் மார்க்கத்தில் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ரயில் போக்குவரத்து 1 மணித்தியாலத்திற்கு தடைப்பட்டதாக செய்தியாளர் குறிப்பிட்டார்.

மழையால் ஏற்படக் கூடிய அனர்த்தங்கள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் மக்களை கேட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் கடும் மழையுடன் கூடிய வானிலை நிலவு வருிகின்றது.

கடும் மழை காரணமாக கேகாலை தெய்யோவிட்ட பகுதி வௌ்ளத்தில் மூழ்கியுள்ளது.

தெய்யோவிட்ட நகரில் சுமார் 6 அடி உயரம் வரை நீர் நிரம்பியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

களனி ஆறு பெருக்கெடுத்ததை அடுத்து தெய்யோவிட்ட நகர் நீரில் மூழ்கியுள்ளது.

இதன் காரணமாக ஹட்டன் கொழும்பு பிரதான வீதியிலும் அவிசாவளை வீதியிலும் போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.

நீரேந்தும் பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையால் விமலசுரேந்திர நீர்த்தேக்கம் வான்பாய்ந்துள்ளது.

லக்ஷ்பான, கெனியன் நீர்தேக்கங்களில் தலா இரண்டு வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.

மேலும் ஹட்டன் டிக்கோயா ஆற்றில் நீர் பெருக்கெடுத்துள்ளதால் அதனை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

கம்பளையில் மகாவலி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் வீசிவரும் பலத்த காற்று காரணமாக பாடசாலைகளில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கொட்டில்களும் சேதமடைந்துள்ளதாக நியூஸ்பெஸ்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மீனவர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்ட்டுள்ளது.

இதேவேளை சீரற்ற காலநிலையால் மாத்தறை வலஸ்முல்ல சபுதந்திரி கந்த பகுதியில் நிலவும் மண்சரிவு அபாயம் காரணமாக அங்குள்ள 20 வீடுகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பலத்த மழை காரணமாக சப்ரகமுவ மாகாணத்தின் பாடசாலைகள் அனைத்திற்கும் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

பெய்து வரும் கன மழை காரணமாக கிங், நில்வளா மற்றும் களு கங்கையின் நீர் மட்டம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அத்தனகல்ல ஓயா மற்றும் பென்தர ஆற்றின் நீர் மட்டமும் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வௌ்ளம் காரணமாக பத்தேகம பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதாக நியூஸ்பெஸ்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த பகுதி முழுவதிலுமான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாகவும் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை பலப்பிட்டிய மாதுகம பாதமுல்ல பகுதியில் 30 வீடுகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.

கொழும்பு பிரதான வீதியின் தங்காலை ரன்ன ஹூங்கம பிரதேசங்கள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதாக நியூஸ்பெஸ்டின் பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஹம்பாந்தோட்டையில் இன்று காலை 6 மணி முதல் பெய்த கனமழை காரணமாக பல பகுதிகள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாக பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஹம்பாந்தோட்டை வராப்பிட்டிய பிரதேசத்தில் 100 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை பகுதியிலுள்ள மீனவர்களை இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன நுழைவு மற்றும் கொக்மாதுவ ஆகிய பகுதிகளில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே ஹங்வெல்ல பகுதியிலும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.

வக்ஓயாவில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.

இந்த பகுதிகளில் போக்குவரத்தும் முழுமையாக ஸதம்பிதமடைந்துள்ளது.

காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான ஆழ்கடல் மற்றும் ஆழமற்ற கடற் பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டை சூழவுள்ள ஏனைய கடற்பிராந்தியங்களிலும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 தொடக்கம் 70 கிலோமீ்ற்றர் வரை அதிகரிக்கலாம் என திணைக்களம் விடுத்துள்ள வானிலை முன்னெச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த கடற் பிராந்தியங்கள் கொந்தளிப்பாக அமையலாம் என்பதால் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என திணைக்களம் அறிவறுத்தியுள்ளது.

மீனவர்கள் மற்றும் கடற்சார் தொழில்களில் ஈடுபடுவோரும் மழை மற்றும கடும் காற்றுடன் கூடிய வானிலை தொடர்பில் விழிப்புடன் செயற்படுமாறு வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் கூறுகின்றார்.

நாட்டின் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றர் வரை மழைபெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வானிலை அதிகாரி தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்